கட்டுப்படுத்தமுடியாத கொரோனா தொற்றாளர்கள்! பறிதவிக்கும் மக்கள். மருத்துவ கட்டமைப்பும் முடங்கும் அபாயம்
“கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் 6 மணிநேரத்துக்கு ஒருவர் மரணிக்கின்றனர். நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது. எனவே, வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தாவிடின் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பும் ஸதம்பிதமடையக்கூடிய அபாயம் இருக்கின்றது.” – என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே மேலும் கூறியவை வருமாறு,
” கொரோனா வைரஸ் தாக்கத்தால் குளிர் காலமான டிசம்பர் மாதம் அவதானம்மிக்க காலப்பகுதி என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் 5 நாட்களில் 10 லட்சம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆயிரமாக இருந்த மரண எண்ணிக்கை 2 ஆயிரம் என்ற கட்டத்துக்கு சென்றுள்ளது. வைத்தியர்கள்கூட மக்களின் மரணங்களைக்கண்டு கதறிஅழும் காட்சிகளையும் கண்டோம்.
இலங்கையும் இன்னும் எச்சரிக்கையான – அவதானம்மிக்க கட்டத்திலேயே இருக்கின்றது. ஆனாலும் நிலைமையைக்கட்டுப்படுத்தக்கூடிய சாத்தியமும் இருக்கின்றது. அதற்கு பொது மக்கள் தரப்பில் இருந்து முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும்.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் ஆரம்பம்வரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆகவே காணப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. நவம்பரில் மட்டும் 100 பேர்வரை உயிரிழந்துள்ளனர். அதாவது 6 மணிநேரத்துக்கு ஒருவர் மரணிக்கின்றனர். சில நாட்களில் 3 மணிநேரத்துக்கு ஒரு மரணம்கூட நிகழ்கின்றது.
நாளொன்றுக்கான தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 200 என்ற கட்டத்திலிருந்து 600 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சைபெறும் தொற்றாளர்களின் எண்ணிக்யை 7 ஆயிரத்துக்குள் வைத்திருந்து சவாலை எதிர்கொண்டுவருகின்றோம். நாளொன்றில் குணமடைபவர்களின் எண்ணிக்கை 300 – 400 ஆக இருக்கின்றபோது தொற்றாளர்களின் எண்ணிக்கை 700 – 800 என்ற கட்டத்துக்கு சென்றால் நிலைமையை சமாளிக்கமுடியாது. வைத்தியசாலை கட்டமைப்பு ஸ்தம்பிதமடைந்துவிடும்.
எனவே, சாதகம், பாதகம் என்பது மக்களின் கைகளிலேயே இருக்கின்றது. அதனால்தான் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு கோருகின்றோம். அநாவசியமாக வெளியேறுவதை தவிர்க்கவும். முடிந்தளவு கூட்டங்களை ஒன்லைன்மூலம் நடத்தவும். கடைகளுக்கு செல்லும்போது மாற்றிய பணங்களை எடுத்துசெல்லவும்.
அட்டுலுகம, பண்டாரகம ஆகிய பகுதிகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும். ” – என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply