கட்டம் கட்டமாக இந்தியாவில் தங்கியிருப்போரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வெளிநாட்டு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோருக்கும் இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிற்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை வெளிநாட்டு அமைச்சில் நேற்று (07) இடம்பெற்ற இந்த சந்திப்பில், கொவிட் – 19 காரணமாக நாடு திரும்ப முடியாமல் இந்தியாவில் காத்திருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருதல், இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபம் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
குறிப்பாக, பல்வேறு தேவைகளின் நிமித்தம் குறுகிய கால பயண ஏற்பாடுகளுடன் இந்தியாவிற்கு சென்ற சுமார் 1500 இற்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகள் கொவிட் – 19 பரவலினால் ஏற்பட்ட போக்குவரத்து தடங்கல் காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டிருக்கின்றவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியை நாடியுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையுடன் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று இந்திய உயர்ஸ்தானிகருக்கும் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில், இந்தியப் பயணிகள் கப்பல் மூலம் கட்டம் கட்டமாக இந்தியாவில் தங்கியிருப்போரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சம்மதம் தெரிவித்ததுள்ளார்.
அத்துடன், குறிப்பிட்ட தொகையினரை விமானம் மூலம் அழைத்து வருவது தொடர்பாகவும், அழைத்து வருவதற்கு முன்னர் இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இலங்கைக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு எற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அதேபோன்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 2010 ஆண்டு இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டபோது, முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்தின் பாராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு யாழ். மாநகர சபை மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயம் இணைந்த நிர்வாக கட்டமைப்பு உருவாக்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதைவிட, இந்திய கடறறொழிலாளர்களினால் இலங்கை கடற்ப்பில் மேற்கொள்ளப்படும் எல்லை தாண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும், பயன்படுத்தப்படுகின்ற சட்டவிரோத தொழில் முறைகளினால் கடல்வளம் பாதிக்கப்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல்களை இம்மாத இறுதிக்குள் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply