தமிழ்க் கட்சிகள் ஒன்றிணையவேண்டுமாம்: த.தே.கூ

யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களின் பின்னராவது தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது. நடைபெறவிருக்கும் தேர்தல்களில் தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து செயற்படவேண்டுமெனக்கோரி அதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கூறினார்.

ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் ஒன்றிணைவதற்குத் தாம் தாயராகவிருந்தபோதிலும், ஒரு சில கட்சிகளின் சுயாலாப நோக்கத்தினால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.இந்த நிலையில் யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தலின் பின்னராவது தமிழ்க் கட்சிகள் அரசியல் பேதங்களை மறந்து ஒன்றுபட்டுச் செயற்பட முன்வரவேண்டுமெனவும், இதற்கான அவசியம் தற்பொழுது தோன்றியிருப்பதாகவும் அரியநேந்திரன் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கூடுதலான உறுப்பினர்களை இழந்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனவும் அரியநேந்திரன் சுட்டிக்காட்டினார்.

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க விசேட வாக்களிப்பு நிலையங்கள்

இதேவேளை, மோதல்களால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலிருக்கும் மக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக முகாம்களுக்கு அருகில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் வாக்காளர்கள் விண்ணப்பிப்பதற்கான திகதி 30ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் தேர்தல்கள் திணைக்களம், இவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படுமெனவும் அறிவித்துள்ளது.

யாழ் மாநகரசபைக்கு 26 உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய 6 அரசியல்க் கட்சிகள் மற்றும் இரு சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 174 பேர் போட்டியிடவிருப்பதுடன், வவுனியா நகரசபைக்கு 15 உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய 6 அரசியல்க் கட்சிகளும், 3 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 135 பேரும் போட்டியிடவுள்ளனர். இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 417 வாக்காளர்களும், வவுனியாவில் 24ஆயிரத்து 626 வாக்காளர்களும் வாக்களிக்கவிருக்கும் நிலையில், மொத்தம் 85 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும் தேர்தல்கள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply