பிரபாகரனும், அவரின் பிள்ளைகள் இருவரும் பலி: பத்மநாதன்
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வொன்றை பொற்றுக்கொள்வதற்கு விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுக்குமென அந்த அமைப்பின் வெளிவிவகாரப் பிரிவின் தலைவர் பத்மநாதன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்னரே ஆயுதங்களை மௌனிப்பது என்ற முடிவை எடுத்திருந்ததாகவும், அரசியல் ரீதியாகத் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதே தமது புதிய திட்டமெனவும் ‘ஹெட்லைன்ஸ் டுடே’ ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் பத்மநாதன் கூறியுள்ளார்.
“தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படும்வரை நாம் அரசியல் ரீதியான போராட்டத்தைத் தொடர்வோம். எமது இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இலங்கையின் போர் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அதற்கான காரணங்கள், எவ்வாறு அவை முன்னெடுக்கப்பட்டன என்பது தெரியும். அடிப்படை உரிமைகளும், அரசியல் உரிமைகளும் மறுக்கப்பட்டமையுமே ஆயுதப் போராட்டங்களுக்கு வழிவகுத்தன” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக ஆயுதமெந்திப் போராடிய விடுதலைப் புலிகள், தற்பொழுது அரசியல் ரீதியான பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் பத்மநாதன் கூறினார்.“எமது தலைவர் கடந்த மூன்று தசாப்த காலமாகப் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்திருந்தார். தற்பொழுது காணப்படும் சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னால் இயலுமானளவு வெற்றிகளை அவர் பெற்றார். அதற்கு அவர் அர்ப்பணிப்புக்களையும் செய்திருந்தார். உலக நாடுகளின் ஒழுங்கமைப்பில் ஏற்பட்ட தலைகீழான மாற்றத்தால் ஆயுதப் போராட்டத்துக்கான ஆதரவு விடைக்காமல் போனதுடன், பூகோள அரசியலையும், உலக நாடுகளின் ஒழுங்கமைப்பையும் இலங்கை அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது. இதுவே ஆயுதப் போராட்டம் தோல்வியடைவதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்தன. அரசியல் ரீதியான போராட்டத்தைத் தொடர்வதே தற்பொழுது எமக்கு எஞ்சியிருக்கும் ஒரேயொரு தெரிவு” என அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிவிவகாரப் பிரிவின் தலைவர் என்ற ரீதியில், சர்வதேச நாடுகளின் ஆதவை வெற்றி கொள்வதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதில் தனது முக்கிய பங்கு எனச் சுட்டிக்காட்டியன பத்மநாதன், விடுதலைப் புலிகள் அமைப்பை மாற்றியமைக்கத் திட்டமிட்டிருப்பதுடன், அது பற்றித் தமிழர்களுக்கு அறிவிக்கவிருப்பதாகவும் கூறினார்.இனிமேல், இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை, தமிழர் தாயகம் போன்ற கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அரசியல் ரீதியான போராட்டத்தை முன்னெடுக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
“விடுதலைப் புலிகள் அமைப்பு மீது சர்வதேச நாடுகள் விதித்திருக்கும் தடைகளை நீக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவேண்டியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களின் ஆதரவைப் பெறவேண்டியுள்ளது. எமது இந்தப் புதிய பாதையை இந்தியாவும், ஏனைய மேற்கத்தேய நாடுகளும் வரவேற்றுகுமென நாம் நம்புகிறோம்” எனவும் பத்மநாதன் தனது செவ்வியில் குறிப்பிட்டார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கு விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் ருத்ரகுமார் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், அது தொடர்பான மேலதிக தகவல்களை அவரிடமே தெரிந்துகொள்ளவேண்டியிருப்பதாகவும் கூறினார்.
பிரபாகரனும், அவரின் பிள்ளைகள் இருவரும் பலி
அதேநேரம், வன்னியில் நடந்த இறுதிக்கட்ட மோதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும் அவருரடைய மூத்த மகன் சார்ள்ஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிரிழந்துவிட்டதாகப் பத்மநாதன் தனது செவ்வியில் மேலும் தெரிவித்தார். இறுதிவரை களத்தில் நின்று போராடிய தலைவர் வே.பிரபாகரன் அங்கேயே உயிரிழந்தபோதும், அவருடைய மனைவி தொடர்பான தகவல்கள் தமக்குத் தெரியாதெனவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply