நிகழ்வுகள் 2020: கொரோனா முதல் அரசியல் மோதல் வரை… உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்கள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மக்கள் பட்ட அவஸ்தைகள், பொருளாதார மந்தநிலை, இயற்கை சீற்றங்கள் என கடுமையான சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2020ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறுகிறது. இந்த ஆண்டு உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றும் முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.
ஜனவரி
ஜன. 2 * ஆஸ்திரேலியாவில் 2019 ஆம் ஆண்டு தொடங்கிய காட்டுத்தீயால் லட்சக்கணக்கான வன உயிரினங்கள் உயிரிழந்தன. இந்த காட்டுத்தீயால் ஆஸ்திரேலியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
ஜன. 3 * அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலின் உச்சபட்சமாக ஈரானின் புரட்சிப்படை தளபதி காசிம் சுலைமானி ஈராக்கின் பாக்தாத் நகரில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஜன. 7 * அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட காசிம் சுலைமானியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் ஈரானின் கேர்மென் நகரில் நடைபெற்றது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர்.
ஜன.8
- காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் ஈராக் நாட்டில் அமெரிக்க படையினர் தங்கியுள்ள 2 படைத்தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதில் சில அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர்.
- காசிம் சுலைமானி கொல்லப்பட்டதால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே உச்சபட்ச பதற்றம் நிலவி வந்தது. ஈரானின் தெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டின் விமானத்தின் மீது ஈரான் பாதுகாப்பு படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அமெரிக்க போர் விமானம் என நினைத்து தவறுதலாக ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 176 பயணிகள் கொல்லப்பட்டனர்.
ஜன.9 * நைஜீரியாவில் ராணுவ தளத்தை குறிவைத்து 9-ம் தேதி போகோஹாராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நைஜீரிய பாதுகாப்பு படையினர் 89 பேர் உயிரிழந்தனர்.
ஜன.16 * அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளால் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் வகையிலான விசாரணை செனட் சபையில் தொடங்கியது.
ஜன.18 * ஏமன் உள்நாட்டு போரில் நடந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 111 பேர் உள்பட மொத்தம் 116 பேர் கொல்லப்பட்டனர்.
ஜன.23 * கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் வுகான் நகரில் 76 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஜன.30 * 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரானா வைரசால் சர்வதேச அளவிலான பொதுசுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்தது.
பிப்ரவரி
பிப்.11 * சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசுக்கு கோவிட்-19 என உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக பெயர் வைத்தது.
பிப்.23 * குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் இந்தியாவின் டெல்லியில் 53 பேர் உயிரிழந்தனர்.
- அனைத்து வகை பொதுப்போக்குவரத்தையும் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதியளித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை லக்சம்பர் நாடு பெற்றது.
பிப்.29 * ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டுவரும் நோக்கத்தோடு தலிபான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடத்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
மார்ச்
மார்ச்.9 * கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இத்தாலியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. * கொரோனா பரவல், ரஷியா-சவுதி இடையேயான வர்த்தக போட்டி காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 30 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது.
மார்ச். 11 * கொரோனா வைரஸ் ஒரு ’பெருந்தொற்று’ என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
மார்ச்.13 * கொரோனா பரவல் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறுவதற்கு நேபாள அரசு தடை விதித்தது.
மார்ச்.24 * கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜப்பானில் நடைபெறவிருந்த 2020 ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
மார்ச்.26
- உலக அளவில் கொரோனா பரவியவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கியது.
- கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் சீனாவை அமெரிக்கா முந்தியது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திற்கு வந்தது.
- கொரோனா பரவலால் உள்நாட்டு சண்டையை நிறுத்துமாறு ஐநா பொதுச்செயலாளர் விடுத்த அழைப்பை சிரியா, ஏமன், லிபியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள போராளிகள் குழுக்கள் ஏற்றுக்கொண்டன.
ஏப்ரல்
ஏப்.1 * எந்த வித அறிகுறியும் இன்றி முதல் முறையாக சீனாவில் 130 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. *கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஏமன் அரசு 470 சிறைக்கைதிகளை விடுதலை செய்தது.
ஏப்.2 * உலக அளவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது.
ஏப்.5 * மனிதர்களை தாண்டி முதல் முறையாக நியூயார்க் பூங்காவில் உள்ள புலி-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ஏப்.7 * கொரோனா காரணமாக ஜப்பானில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
ஏப்.8 * கொரோனா காரணமாக சீனாவின் வுகான் நகரில் அமலில் இருந்த ஊரடங்கு 76 நாட்களுக்கு பின்னர் முதல் முறையாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
- ஐநா-வின் முயற்சியால் சவுதி கூட்டுப்படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏமனில் நடந்துவரும் உள்நாட்டு போர் கொரோனாவை கருத்தில் கொண்டு 8-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஏப்.10 * உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.
ஏப்.14 * கொரோனா பரவல் குறித்த தகவலை மறைத்ததாக 14-ம் தேதி உலக சுகாதார அமைப்பு மீது குற்றம்சுமத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த அமைப்புக்கு வழங்கிவந்த நிதியை நிறுத்துவதாக அறிவித்தார்.
ஏப்.19 *கனடாவின் நோவா ஸ்காட்யா நகரில் கேப்ரியல் வார்ட்மென் என்ற நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய கேப்ரியலை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
மே
மே.7 * இந்தியாவின் ஆந்திரபிரதேசம் மாநிலம் விசாகபட்டினத்தில் எல்ஜி பாலிமர்ஸ் கெமிக்கல் நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக 11 பேர் உயிரிழந்தனர்.
மே.9 * எல்லையில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
மே.10 * பயிற்சியின் போது ஈரான் கடற்படை போர் கப்பல் மற்றொரு ஈரான் பயிற்சி கப்பல் மீது தவறுதலாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர்.
மே.21 * இந்தியாவில் உருவான அம்பன் புயல் இந்திய-வங்காளதேச கடல் எல்லையில் கரையை கடந்தது. இந்த புயலால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மே.22 *பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் கராச்சியின் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 99 பேர் உயிரிழந்தனர்.
மே.25 * அமெரிக்காவில் போலீசாரின் கைது நடவடிக்கையின் போது ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நிறவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
மே.27 * ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த சீன நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அதிக ஆதரவு கிடைத்தது.
மே.27 * கொரோனா வைரசுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.
ஜூன்
ஜூன்.3 * ரஷியாவின் சைபீரியாவில் உள்ள அம்பர்நயா ஆற்றில் 20 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதையடுத்து அதிபர் புதின் அவசரநிலை பிரகடனம் செய்தார்.
ஜூன்.15 * கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 40 வீரர்கள் உயிரிழந்தனர் அல்லது படுகாயமடைந்தனர்.
ஜூன்.28 * உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது.
ஜூன்.30 * ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த சீனா ஒப்புதல் அளித்தது.
ஜூலை
ஜூலை.2 * மியான்மர் நாட்டில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 174 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை.10 * துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள ஹேகியா சோபியா வரலாற்று அருங்காட்சியகத்தை இஸ்லாமிய மத வழிபாட்டு தளமான மசூதியாக மாற்ற அந்நாட்டு அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார்.
ஜூலை.12 * சீனாவில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 141 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை.15 * இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, மைக்ரோ சாப்ட் தலைவர் பில் கேட்ஸ் உள்பட உலகின் மிகவும் பிரபலமான நபர்களின் டுவிட்டர் கணக்குகள் மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டது.
ஜூலை.19 * பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தியா மற்றும் நேபாளத்தில் மொத்தம் 189 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை.25 *வடகொரியாவில் 1 நபருக்கு கொரோனா பரவல் இருப்பதாக சந்தேகம் எழுந்ததாகவும், அது தொடர்பாக அதிபர் கிம் அவசர கூட்டத்தை கூட்டியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதுவே தங்கள் நாட்டில் கொரோனா பரவியுள்ளது என உறுதி செய்ய வடகொரியாவில் இருந்து வெளியான முதல் செய்தியாகும். இதற்கு முன்னதாக தங்கள் நாட்டில்
யாருக்கும் கொரோனா பரவவில்லை என வடகொரியா தெரிவித்து வந்தது.
ஆகஸ்ட்
ஆக.4 * லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் உள்ள துறைமுகத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. துறைமுக பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 220 பேர் உயிரிழந்தனர். 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். பெய்ரூட் நகரமே நிலைகுலைந்தது.
ஆக.7 * இந்தியாவின் கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தை விட்டு விலகி சென்று விபத்துக்குள்ளானது. 191 பேர் பயணம் செய்த அந்த விமானத்தில் விபத்து காரணமாக 19 பேர் உயிரிழந்தனர்.
ஆக.9 * பெலாரஸ் நாட்டில் அதிபர் தேர்தலில் அலெக்ஸ்சாண்டர் மீண்டும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக முதல் முறையாக எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெறத் தொடங்கியது.
ஆக.11 * உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு (ஸ்புட்னிக் வி) ரஷியா அனுமதி அளித்துள்ளதாக அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆக.13 * இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவை சுமூகமாக்க அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபட இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
ஆக.18 * 1,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மொரிசீயல் தீவு பகுதியில் விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்த கச்சா எண்ணைய் கடலில் கலக்கத்தொடங்கியது.
ஆக.28 * உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜின்சோ அபே அறிவித்தார்.
செப்டம்பர்:
செப்.4 * கொசோவா – செர்பியா நாடுகளுக்கு இடையே பொருளாதார ரீதியில் சுமூக உறவு ஏற்பட்டது என அறிவிக்கப்பட்டது. இந்த இரு நாடுகளும் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் வகையில் தங்கள் நாட்டு தூதரகங்களை ஜெருசலேமிற்கு மாற்ற சம்பதம் தெரிவித்தன.
- இஸ்ரேல் – பக்ரைன் இடையே அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது.
செப்.16 * ஜின்சோ அபே பதவி விலகியதையடுத்து ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுஹா பொறுப்பேற்றுக்கொண்டார்.
செப்.27 * நகோர்னா – கராபாக் மாகாணத்தை மையமாக கொண்டு அர்மீனியா – அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே போர் தொடங்கியது.
அக்டோபர்:
அக்.10 * அர்மீனியா-அசர்பைஜான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
அக்.17 * நியூசிலாந்து தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் கட்சி மீண்டும் வெற்றிபெற்றது. இதன் மூலம் ஜெசிந்தா ஆர்டெர்ன் நியூசிலாந்தின் பிரதமராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அக்.23 * இஸ்ரேல் – சூடான் இடையேயான உறவை சுமூகப்படுத்துவம் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது.
அக்.29 * செனகல் நாட்டின் கடல்பரப்பில் அகதிகள் படகு கவிழ்ந்து 140 பேர் உயிரிழந்தனர்.
அக்.30 * துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 81 பேர் உயிரிழந்தனர்.
நவம்பர்
நவ.4 * பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியது.
நவ.7 * அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நவ.8 * உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது.
நவ.9 * 3-ம் கட்ட பரிசோதனையில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 90 சதவிகிதம் செயல்திறன் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.
- ரஷியா தலைமையில் அர்மீனியா – அசர்பைஜான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த போரில் அசர்பைஜானிடம் அர்மீனியா தோல்வியடைந்தது.
நவ.11 * ரஷியாவின் ஸ்புட்னிக் – வி கொரோனா தடுப்பூசி 92 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டது.
நவ.12 * ஹாங்காங் நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
நவ.15 * இந்தியா வெளியேறிய ஆசிய-பசிபிக் நாடுகளின் வர்த்தக ஒப்பந்தம் சீனா தலைமையில் கையெழுத்தானது.
நவ.16 * மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 94.5 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டது.
நவ.18 * அனைத்துகட்ட பரிசோதனைகளும் முடிவடைந்ததையடுத்து பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டது.
நவ.23 * இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா , ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 70 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டது. தடுப்பூசியின் செயல்திறனை 90 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
நவ.26 * இந்தியாவின் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடங்கினர்.
நவ.27 * ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே தெஹ்ரான் நகரில் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நவ.30 * தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி கோரி மாடர்னா நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் விண்ணப்பித்தது.
நவ.30 * இந்தியாவில் பஞ்சாப், அரியானா விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி நோக்கி தங்கள் பேரணியை தொடங்கினர். அதன் பின்னர் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
டிசம்பர்:
டிச.1 * ஐரோப்பாவில் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்க கோரி ஐரோப்பிய சுகாதார அமைப்பிடம் பைசர் நிறுவனம் விண்ணப்பித்தது.
டிச.3 * பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து அனுமதி அளித்தது. கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதியளித்த முதல் நாடு இங்கிலாந்து ஆகும்.
டிச.5 * ரஷியாவில் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணி தொடங்கப்பட்டது.
டிச.8 * உலகின் முதல் நாடாக இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு போடும் பணி தொடங்கப்பட்டது.
டிச.10 * இஸ்ரேல்-மொரோக்கோ நாடுகளுக்கு இடையே சுமூக உறவு ஏற்பட்டது.
டிச.12 * இஸ்ரேல் – பூட்டான் இடையே தூதரக உறவு சுமூகமாக ஏற்பட்டது.
டிச.14 * பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அமெரிக்காவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
மொத்தத்தில் 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோயின் ஆதிக்கம் நிறைந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரசால் உலக மக்களை பெரும் பிரச்சனைகளை சந்தித்தனர். ஆனாலும், வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் 2021 ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையும், புதிய முன்னேற்றத்தையும் கொடுக்கும் ஆண்டாக மாறும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply