ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா: படப்பிடிப்பு ரத்து; சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் தர்பார் படத்துக்கு பிறகு சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.நாயகிகளாக குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.இதன் படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கி 40 சதவீதம் முடித்து விட்டனர்.
அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் தயாராகி வருவதால் அதற்கு முன்பாக தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி படக்குழுவினரிடம் அறிவுறுத்தி இருந்தார். இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 14-ந் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்கினர்.
இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வந்தார். சில தினங்களுக்கு பிறகு நயன்தாராவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ரஜினி, நயன்தாரா இணைந்து நடித்த காட்சிகளை படமாக்கினர். ரஜினி பங்கேற்ற பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது.
ரஜினி தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை படப்பிடிப்பில் தொடர்ச்சியாக பங்கேற்று வருவதாகவும், இதனால் திட்டமிட்டதை விட காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். ரஜினிகாந்த் பொங்கலுக்கு பிறகு தனி கட்சி தொடங்க வசதியாக அடுத்த மாதம் 12-ந் தேதிக்குள் அவர் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் படமாக்கி முடித்து விட திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக அண்ணாத்த படப்பிடிப்புக்குள் கொரோனா நுழைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது படக்குழுவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
பின்னர் அண்ணாத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அண்ணாத்த படப்பிடிப்பில் வழக்கமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்தது. பாதுகாப்பை கருதி அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
படப்பிடிப்பில் ஏற்கனவே கொரோனா முன்எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சமூக விலகலை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல், கிருமிநாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவை கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டன. படக்குழுவினர் வெளியே செல்லவும் தடை விதித்து இருந்தனர். அதையும் மீறி கொரோனா பரவியது எப்படி? படக்குழுவை சேர்ந்த யாரேனும் வெளியில் சென்று வந்தார்களா? என்று விசாரணை நடக்கிறது.
ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதர நடிகர், நடிகைகளும் தனிமைப்படுத்திக்கொண்டனர். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். வருகிற 31-ந் தேதி தனி கட்சி தொடங்கும் தேதி உள்ளிட்ட சில முக்கிய அரசியல் விஷயங்களை அறிவிக்க உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply