நைஜரில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் : 80 பேர் கொன்று குவிப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதோடு அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இவர்கள் அண்டை நாடுகளான நைஜர், சாத் உள்ளிட்ட நாடுகளிலும் காலூன்றி பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றனர். குறிப்பாக நைஜர் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல்களால் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோ இடையே முத்தரப்பு எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நைஜரின் தில்லாபுரி பிராந்தியத்தில் அதிக அளவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் தில்லாபுரி பிராந்தியத்தில் உள்ள சோம்பாங்கவ் என்ற கிராமத்துக்குள் நேற்றுமுன்தினம் இரவு பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் வந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் அங்கிருந்த வீடுகளை சூறையாடினர்.
பின்னர் அவர்கள் வீடுகளுக்குள் இருந்த நபர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்தனர்.
இப்படி பெண்கள், சிறுவர்கள் உட்பட 50 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கொடூர தாக்குதல் நிகழ்ந்த அடுத்த சில மணி நேரத்துக்குள் தில்லாபுரி பிராந்தியத்தில் உள்ள ஸாரூம்டேரே என்ற மற்றொரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
அங்கு அவர்கள் தங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர். இதில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 2 கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நைஜரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதனிடையே தாக்குதல் நடந்த 2 கிராமங்களிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை முடுக்கி விடப்பட்டுள்ளதாக நைஜரின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நைஜரில் அதிபர் தேர்தல் நடந்து வரும் சமயத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. முதல்கட்ட தேர்தல் முடிவுகளை நேற்று முன்தினம் வெளியிட்ட தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply