எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு துறைகளிலும் உரிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன: விமல் வீரவன்ச
நாடு முழுவதும் படை முகாம்கள் இருக்கும் நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியா சென்று கோரியது போல் வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம் விசேட சலுகை வழங்கி அங்கு படை முகாம்களை அமைக்காமல் இருக்க முடியாதென்றும், இவ் விடயத்தில் எவரும் தலையிட முடியாதென்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி.தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சட்ட மூலம் மீதான விவாதத்தில் பேசும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு கூறினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
“”எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு துறைகளிலும் உரிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அதேபோல் பாதுகாப்பு தரப்பிலும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அதன் பொருட்டே இதுவரை காலமும் சம்பிரதாய பூர்வமாக இருந்து வந்த கூட்டுப் படைகளின் தளபதி பதவியை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதற்கான ஏற்பாடுகள் இந்த சட்டமூலத்தின் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
கடந்த காலங்களில் கூட்டுப் படைத் தளபதி பதவிக்குரிய சட்டபூர்வமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளைப் பாதுகாப்புச் செயலாளரே திறம்பட மேற்கொண்டு வந்தார். எதிர்வரும் காலங்களில் வரவிருக்கும் பாதுகாப்புச் செயலாளர்கள் கோதாபய ராஜபக்ஷவைப் போன்று ஒருங்கிணைப்பு கூட்டு நடவடிக்கையில் திறம்பட செயற்படுவார்களா என்பதைக் கூற முடியாது.இதேநேரம், வடக்கு, கிழக்கில் படை முகாம்களை அமைக்க இடமளிக்க வேண்டாமென தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிடம் சென்று கேட்கின்றனர். படை முகாம்களை எங்கு அமைக்க வேண்டுமென்பது குறித்து இந்த நாடே தீர்மானிக்க வேண்டும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் படை முகாம்கள் இருக்கும் போது இதில் வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம் விசேட சலுகை வழங்க முடியாது. இந்த விடயத்தில் வேறு எவரும் தலையிட்டு செயற்படவும் முடியாது. எனவே, இனியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம் மாதிரியான செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பயங்கரவாதத்தை யுத்தத்தின் மூலம் தோற்கடித்த நாடு என்ற வகையில் நாம் இனியும் அவ்வாறானதொரு ஆபத்துக்கு இடமளிக்க முடியாது. இனியும் பயங்கரவாதம் தலை தூக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளுக்கே கூட்டுப் படைகளின் தளபதி பதவிக்கான அதிகார அதிரிப்புகள் தேவைப்படுகின்றன’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply