அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு : 5 பேர் பரிதாப பலி
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன.
ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. விரைவில் அமைய இருக்கும் ஜோ பைடன் தலைமையிலான புதிய அரசு இந்த துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரில் உள்ள ஒரு மருந்துக் கடையில் நேற்று மாலை மக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கடைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்த நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். கடைக்குள் இருந்தவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்குமாக ஓட்டம் பிடித்தனர்.
இதில் பலரது உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த மர்ம நபர் மருந்துக் கடையின் பின்புறமாக வெளியேறி ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை விரட்டிச் சென்றனர். அந்த மர்ம நபர் செல்லும் வழியில் தன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ஓடினார். இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலர் சுருண்டு விழுந்தனர்.
ஈவன்ஸ்டோன் என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்குள் சென்ற மர்ம நபர் அங்கிருந்த ஒரு பெண்ணை பிணைக் கைதியாக பிடித்து வைத்து போலீசாரை மிரட்டினார்.
போலீசார் சரணடைந்து விடும்படி அவரை எச்சரித்ததால் அந்தப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் போலீசார் அந்த மர்ம நபரை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அந்த மர்ம நபர் நடத்திய இந்த தொடர் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகினர். பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த பெண் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply