வவுனியா நகரை இரண்டு வாரங்கள் முடக்குமாறு சுகாதார திணைக்களம் பரிந்துரை
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா நகரை முடக்குவதற்கு தாம் பரிந்துரை செய்துள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் கொவிட்-19 அவசர கால நிலமைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் தலைமையில் நேற்றைய தினம் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இது தொடர்பாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 19 கிராம சேவகர் பிரிவுகளில் முழுமையான முடக்கத்தை முன்னெடுக்குமாறு அரச அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளோம். அந்தவகையில் ஏ-9 வீதியில் நொச்சிமோட்டை பாலம் மற்றும் இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நகர சபையின் வரவேற்பு வளைவு, மன்னார் வீதியில் நெளுக்குளம் பொலிஸ் நிலையம், பூந்தோட்டம் சந்தி, மாமடு சந்தி ஆகிய பகுதிகள் பொலிஸாரால் முடக்கப்படும்.
இந்தப் பகுதிகளால் வவுனியா நகருக்கு உள்ளே வரும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படும்.
இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு இந்த நடைமுறை நீடிக்கும். அவசரத் தேவைகள், அத்தியாவசியத் தேவைகள், அரச ஊழியர்கள் வந்துசெல்வதற்கு அனுமதி வழங்கப்படும். அத்துடன் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள், முடக்கப் பகுதிக்குள் நிறுத்தாமல் செல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான பரிந்துரைகளை நாம் அனுப்பியுள்ளோம்.ஏனைய நடவடிக்கைகளை அரச அதிபர் முன்னெடுப்பார் என்று தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply