நாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை: அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.

தாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊழல் குழுக்களின் மூலமே பிள்ளையானை விடுதலை செய்துள்ளனர் எனவும் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை ஒரு ஊழல்வாதியென முடிந்தால் நீதிமன்றில் நிரூபித்துக் காட்டுமாறும் அவர் அரசாங்கத்திற்குச் சவால் விடுத்துள்ளார்.

தலவாக்கலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஊடாக அநுரகுமார திஸாநாயக்கவும் தவறு செய்துள்ளதாக ஒரு கதையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

ஜனாதிபதியால் நியமிக்கப்படும் குழுக்களால் தண்டனை வழங்க முடியாது. நீதிமன்றத்தால்தான் தண்டனை வழங்க முடியும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம்.

மக்களுக்கு நாம் ஒன்றைத் தெளிவாகத் தெரிவிக்க விருப்புகிறோம். நாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை. ஆகவே, எமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை. அநுரகுமார திருடர்களுக்கு பயமென்றால் அவர்களைத் திருடர்களென கூறமாட்டார். ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பலர் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டனர் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் அறிந்துதான் தகவல்களை வெளியிட்டுள்ளோம்.

ஊழல் எதிர்ப்புக் குழுக்கள் என ஊழல்வாதிகளே குழுக்களை அமைத்துக்கொண்டு அரசுக்கு எதிரான கருத்துகளை ஒடுக்குகின்றனர். அவ்வாறான ஊழல் குழுக்களின் மூலம்தான் பிள்ளையானை விடுதலை செய்துள்ளனர். அந்தக் குழுக்கள் ஊடாகத்தான் சிபாரிசுகள் வருகின்றன. பல்வேறு ஊழல், மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

ஆகவே, நீதிமன்றம் நீதியானதா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாம் தயார். அதேபோன்று, நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் என அனைத்து இடங்களிலும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம்.

முடிந்தால் நீதிமன்றில் குற்றவாளியாக்கி அநுரகுமாரை சிறையில் அடைத்துக் காட்டுங்கள். மக்களின் பணத்தில் ஒரு சதத்தைக்கூட கொள்ளையடிக்காதவர். ஊழல் எதிர்ப்பு குழுவில் அநுரகுமார திஸாநாயக்கவால் செய்யப்பட்ட ஒருவிடயத்தை நிரூபித்துக்காட்டுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply