கூட்டணி பற்றி விரைவில் அறிவிப்பேன்: கமல்ஹாசன் பேட்டி
ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பற்றிய 14 உறுதிமொழிகள் கொண்ட அறிக்கையை கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். பிறகு நிருபர்கள் கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கிராமசபை கூட்டங்களை பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன?
பதில்:- தமிழகத்தை சீரமைப்போம் என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் செயல்பட்டு வருகிறது. கிராமசபை கூட்டங்கள் மக்கள் நீதி மய்யம் மூலமாகவே வெளி உலகுக்கு தெரியவந்தது.
அதன் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம்.
கேள்வி:- தேர்தல் அறிவிப்பு வெளியிட இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை எப்போது வெளியிட போகிறீர்கள்?
பதில்:- மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். நல்லவர்களோடு கூட்டணி அமைப்போம் என்று ஏற்கனவே கூறியுள்ளோம். அரசியலில் நல்லவர்களாக இருப்பவர்கள் வெற்றி பெறும் அளவுக்கு வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். அதுபோன்றவர்களுடன் நிச்சயம் கை கொடுப்போம்.
கேள்வி:- ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைபாட்டை தெளிவு படுத்தி உள்ளார். அவரிடம் ஆதரவு கேட்பது பற்றி என்ன முடிவு எடுத்து இருக்கிறீர்கள்?
பதில்:- ரஜினிகாந்த் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருக்கிறார். ரசிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இனி மிச்சத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
கேள்வி:- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூட்டணிக்கு தொடர்ந்து உங்களை அழைத்துக்கொண்டு இருக்கிறாரே? உங்கள் தந்தையும் காங்கிரஸ்காரர்தானே. அவரது அழைப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- என் தந்தை காங்கிரஸ் காரர்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. காங்கிரசின் அன்பை பெற்றவர்கள் நாங்கள். அதேநேரத்தில் காங்கிரசுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்குமா என்பது பற்றி தெரிவிக்கக்கூடிய நேரம் இதுவல்ல.
கேள்வி:- அ.தி.மு.க.- தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் கட்சியை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறீர்களா?
பதில்:- தமிழக மக்கள் புதிய மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டையும், யாருடன் கூட்டணி என்பதையும் விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply