ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட கோவில்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்

தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். இவரது ஏற்பாட்டில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.குன்னத்தூரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

சுமார் 12 ஏக்கர் நிலபரப்பில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் 7 அடி உயர முழு உருவ வெண்கலச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிலையும் 400 கிலோ எடை கொண்டதாகும்.

இந்த சிலைகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடந்த 14-ந்தேதி பிரதிஷ்டை செய்தார். இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரதம் இருந்து தினமும் இதற்கான கும்பாபிஷேக பணிகளை கவனித்து வந்தனர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருக்கோவில் திறப்பு விழா இன்று காலை நடந்தது. முன்னதாக கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. திருக்கோவிலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வணங்கினர்.

இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பயிற்சி மையம், கலையரங்கம் ஆகியவற்றையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பின்னர் நடைபெற்ற கோ பூஜையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 120 பசுகளை தானமாக வழங்கினர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் நலிவுற்ற அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு சால்வை மற்றும் பொற்கிழிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

விழாவில் ஏராளமான ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேசினர்.

விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக எடப்படி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன், மாணிக்கம், மதுரை கலெக்டர் அன்பழகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதன் பிறகு அவர் காரில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். பெருங்குடி, மண்டேலா நகர், கப்பலூர், திருமங்கலம் வழியாக டி.குன்னத்தூர் கிராமத்துக்கு சென்றார்.

செல்லும் வழிகளில் சாலையின் இருபுறங்களிலும் அ.தி.மு.க.வினர் திரண்டு இருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கப்பலூர் முதல் குன்னத்தூர் வரை 15-க்கும் மேற்பட்ட இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்பம் மற்றும் மேள தாளங்கள் முழங்க அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜெயலலிதா கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அ.தி.மு.க.வினர் பாதயாத்திரையாக வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விழா திடலிலேயே மதிய உணவு சாப்பிட்டனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு விமான நிலையம் வரும் எடப்பாடி பழனிசாமி மதியம் 3 மணி அளவில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply