தமிழகத்தின் உயர் மட்ட குழு இலங்கை வர ஏற்பாடு

தமிழக தூதுக்குழு வொன்று கூடியவிரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் இதற்கான உறுதிமொழியை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தன்னிடம் கூறியதாக இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், இ. தொ. கா.வின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய, கடந்த 29ஆம் திகதி தமிழகம் சென்று கலைஞர் கருணாநிதி, அவரது மகளும் இலங்கை தொடர்பான கலைஞரின் ஆலோசகருமான கனிமொழி எம். பி. ஆகிய இருவரையும் சந்தித்த போதே கலைஞர் இந்த உறுதி மொழியை வழக்கினார்.

இலங்கைக்கு வருகை தரும் தமிழகத் தூதுக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் யார்? வரும் திகதி, அதற்கு தலைமை வகிப்பவர் யார்? என்பது குறித்து கூடிய விரைவில் தமிழக அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் வெளியிடப்படும்.

தமிழக அரசாங்கம் இலங்கைக்கு குறிப்பாக வடக்கிலுள்ள அகதி முகாம்களில் வசிப்பவர்களின் நலன் கருதி வழங்கப்படும் 500 கோடி ரூபா குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது என தெரிவித்த அமைச்சர் தொண்டமான் தமிழக அரசாங்கம் மலையக பகுதிகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவது குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக மலையக வீதி அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி மற்றும் மலையக மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

இலங்கைவாழ் இந்திய வம்சாவளியினர் பயனளிக்கும் வகையில் மலையகத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் தனியான வைத்தியசாலை யொன்றும் தனியான பல்கலைக்கழகம் ஒன்றும் அமைப்பது குறித்தும் ஆராயப்பட்டது. அத்துடன் மலையக மக்களின் நலன் கருதி தோட்டப்பகுதியில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த தேவையான பஸ்களைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதென கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply