புர்காவை தடைசெய்வதால் பிரச்சினைகள் தீவிரமடையும் : முஜிபுர் ரஹ்மான்
புர்காவை தடைசெய்வதால் தற்போது காணப்படும் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையுமே தவிர, அவை ஒருபோதும் தணியப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புர்கா விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் மேலும் கூறியுள்ளதாவது, “மக்களின் ஜனநாயக உரிமையைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அதன் விளைவாகப் பிரச்சினைகள் தீரப் போவதில்லை. மாறாக பிரச்சினைகள் தீவிரமடையும்.
அரசாங்கத்தின் தீர்மானங்கள் நாட்டிலுள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கு வழிசெய்யும் என்று எமக்குத் தோன்றவில்லை.
அதேவேளை புர்கா என்பது மத ரீதியான தீவிரவாதப்போக்கின் அடையாளமாக இருப்பதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் அதுகுறித்து சரத் வீரசேகர தீர்மானம் எடுக்க முடியாது. என்னுடைய பார்வையில் அவர்தான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது.
அத்துடன் அவர் விரும்பும் ஆடையையே நாட்டுமக்கள் அணிய வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் தமது மத ரீதியான நம்பிக்கையின்படி அணியும் ஆடைகளைத் தடைசெய்வதே தீவிரவாதப் போக்குடைய சிந்தனையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply