திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களின் செல்வங்கள் சூறையாடப்படும் : டிடிவி தினகரன் பேச்சு
வருகிற சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சவுந்திரபாண்டியனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருவொற்றியூர் தேரடியில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது;-
இன்றைக்கு தமிழகத்திலே ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களால் இயக்கப்படுகின்றன கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தான். ஒருபக்கம் எம்.ஜி.ஆரால் தீய சக்தி என்று வர்ணிக்கப்பட்ட தி.மு.க. போட்டியிடுகிறது. இன்னொரு பக்கம் பண மூட்டையுடன் அலைகின்ற துரோக கூட்டணி போட்டியிடுகிறது.
5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. தான் இன்றைக்கு தமிழக மக்கள் படுகின்ற அனைத்து துன்பத்திற்கும் காரணம். கச்சத்தீவு, நீட், டெல்டா பகுதியில் விவசாயிகளை பாதிக்கின்ற ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க.தான்.
மக்களை ஏமாற்றி எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக தி.மு.க.வினர் பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள். இந்தமுறை தப்பித்தவறி தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், மக்களின் செல்வங்கள் எல்லாம் சூறையாடப்படும். அவர்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கப்போவது அ.ம.மு.க. கட்சி தான்’.
தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி இத்தனை வருடம் ஆட்சியில் இருந்து விட்டு, இப்போது திடீரென குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500-யும், 6 சிலிண்டர் இலவசமாக கொடுப்பேன் என்கிறார். மத்தியில் உள்ள கட்சியுடன் கூட்டணி இருக்கிறார்கள் அவர்கள் நினைத்தால் டீசல், பெட்ரோல் விலையை மற்ற மாநிலங்கள் போல் குறைக்கலாம்.
எங்கள் தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவோம் என்று நடைமுறைக்கு சாத்தியமாகியுள்ள திட்டங்களை தான் சொல்லி உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரக் கூட்டத்திற்கு தே.மு.தி.க. தொகுதி பொறுப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஏராளமான வாகனங்களில் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் டி.டி.வி. தினகரன் வந்த சிறிது நேரத்தில் அனைவரும் பிரசார கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினர்.
இதுகுறித்து தே.மு.தி.க. நிர்வாகி கூறுகையில், கூட்டணி கட்சியினருக்கு உரிய மரியாதையை அ.ம.மு.க.வினர் தரவில்லை. அதனால் நாங்கள் கூட்டத்தை புறக்கணித்து அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறோம். எங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றால், அ.ம.மு.க.வின் பிரசாரத்தை புறக்கணிப்போம் என்று அவர்கள் எச்சரித்தனர்.
அதைத்தொடர்ந்து பொன்னேரி தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் பொன் ராஜாவை ஆதரித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply