ஜனாதிபதி கொலை முயற்சி; இரு வெளிநாட்டவர் உட்பட ஐவர் கைது

ஜனாதிபதி கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட ஐந்துபேர் அடங்கிய புலிகள் இயக்க தாக்குதல் குழுவினரைப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர். இவர்கள் மேற்படி கொலை முயற்சிக்காக 40 கிலோ நிறையான ஹெட்டிசைற் எனப்படும் அதிசக்தி வாய்ந்த வெடி குண்டுப் பொருளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் மேற்படி புலிகள் இயக்கக் குழுவினரைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டவர்களும் கிளிநொச்சியில் செயற்படும் அரசசார்பற்ற நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் எனவும் இவர்கள் இருவரும் கொலைக்கான திட்டத்தை வகுத்திருந்த புலிகள் இயக்கக் குழுவுக்கு வழங்கிய உதவிகள் பாதுகாப்புத்துறை உயர்மட்டத் தகவல் வட்டாரங்களிலிருந்து கடந்த 29 ஆம் திகதி தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மேற்படி வெளிநாட்டவர்களும் புலிகள் இயக்கத்துக்கு நெருக்கமாகச் செயற்பட்டுவரும் இரண்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் குறிப்பிட்ட நாடுகளே கடந்த காலங்களில் அரசபடையினரால் பிரபாகரன் உட்பட புலிகள் இயக்கத் தலைவர்கள் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், பிரபாகரனையும் ஏனைய முன்னணித் தலைவர்களையும் தப்புவிப்பதற்காகச் சர்வதேச மட்டத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் இரண்டுபேர் ஐக்கிய நாடுகள் சபை சார்ந்த இரண்டு நிறுவனங்களில் சாரதிகளாகப் பணியாற்றுபவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இவர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டவர்கள் தானா அல்லது புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது பற்றி உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

மேற்படி இரண்டு வாகனச் சாரதிகளும் ஐக்கிய நாடுகள் சபைக்குரிய சலுகைகளின் கீழ் குறிப்பிட்ட பிரதேசங்களில் செயற்பட்டு வந்தவர்கள் எனவும் இவ்வாறு இவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் இவர்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் சபையில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஆயினும் அதற்குப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்ட நிலையில், அவர்கள் உட்பட 5 பேரும் புலனாய்வுப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் செய்யப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கூறியுள்ளார்.

முன்னர் ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோதாபய ராஜபக்ஷ மீதான கொலை முயற்சித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கைகளில் ஐக்கிய நாடுகள் சபை சார்ந்த சர்வதேச நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த இரண்டு சாரதிகள் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் உயர் அரசியல் தலைவர்களை குறி வைத்து இவ்வாறு புலிகள் இயக்கக் குழுவினர் மேற்கொண்டு வந்த தாக்குதல் திட்டங்களிலும் தாக்குதல்களிலும் ஐக்கிய நாடுகள் சபை சார்ந்த நிறுவனங்களிலும் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் உட்பட சர்வதேச நிறுவனங்களிலும் பணியாற்றிய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நபர்கள் நெருங்கிய தொடர்புகளை உடையவர்களாக இருந்துள்ளனர்.

இவ்வாறு இதுவரையில் புலனாய்வுப் பிரிவினால் கண்டு பிடிக்கப்பட்ட தகவல்களிலிருந்து அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை சார்ந்த நிறுவனங்கள், சர்வதேச சேவை அமைப்புகள் ஆகியவற்றுக்கும் அவை சார்ந்த சில நாடுகளின் அரசதரப்புகளுக்கும் புலிகள் இயக்கத்துடன் இருந்து வந்த தொடர்புகள் தெளிவாகத் தெரியவந்துள்ளன. இந்த வகையில் இவ்வாறான சர்வதேச அமைப்புகளுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இருந்திருக்கக்கூடிய தொடர்புகள் பற்றி பாதுகாப்புத்துறை விசேட விசாரணைகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் புலிகள் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய மேலும் பல தகவல்கள் வெளிவரக்கூடும் என பாதுகாப்பு விமர்சகத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply