வட மாகாண கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு
வடமாகாணத்திற்கு உட்பட்ட கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு யாழ்பாணம் மத்திய கல்லூரி ‘தந்தை செல்வா’ மண்டபத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்துகொண்டார். வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வடமாகாண மகளிர் விவகாரத்துறை அமைச்சின் செயலாளர், கல்வித்துறை வடமாகாண பணிப்பாளர், பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் விருதுபெறும் கலைஞர்கள் என பலபேர் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த ஆளுநர் வடமாகாணம் என்பது தமிழர்களுடைய கலையையும் கலாச்சாரத்தையும் அதனுடைய தனித்துவமான பாரம்பரியத்தையும் சொல்லி நிக்கின்ற இடமாகும். குறிப்பாக, யாழ் மாவட்டத்தினுடைய தனித்துவத்தையும் பாரம்பரியத்தையும் கண்டு மகிழ்ந்தும் பூரித்தும் போய்யுள்ளேன். ஆனால், இன்று அவற்றையெல்லாம் நாங்கள் மறந்து போய்விடுமோ என அச்சத்தோடு வாழவேண்டிய காலம் வந்துவிட்டது எனவும் கவலை தெரிவித்தார்.
இருப்பினும், இக்கலைகளையும் பாரம்பரியத்தையும் எங்களுடன் தக்கவைத்துக்கொண்டு நம்முடன் இருப்பவர்களாக இந்த கலைஞர்கள் விளங்குகிறார்கள். ஆகவே, எதை நாங்கள் இழந்து விடாது எங்களுடன் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றோமோ அதனையும் அதனை செய்பவர்களையும் கௌரவித்து அழகுபடுத்தி அடையாளப்படுத்தும் நோக்குடன் தான் இவ் விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பாரம்பரிய கலைகளை மறந்து போகின்ற நிகழ்வுதான் தற்போது அதிகமாக கண்டுவருவதாகவும் பதிவு செய்யப்பட்ட பாடல்களை இயக்கி நடனமாடும் நிகழ்சிகள் தற்போது நடைபெறுவதாகவும் இதனால் பாடகர்கள் மற்றும் பின்னணி பாடகர்களுடைய கலை அருகி வருவதாகவும் கவலை வெளியிட்டார்.
தொழில்நுட்பம் என்பது குறிப்பிட்ட கலையை நவீனபடுத்துவதாக அமைய வேண்டும் மாறாக அதனை மாற்றுவதற்கான ஒரு வழியாக அமையக்கூடாது என குறிப்பிட்டார். மேலும், வடமாகாணத்திலே நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பதிவு செய்யப்பட்ட பாடல்களை ஒலிப்பதை நிறுத்தி பாடகர்கள், பின்னணி பாடகர்கள் மற்றும் வாத்திய கலைஞர்களை பயன்படுத்தி நிகழ்த்தப்பட வேண்டுமெனவும் அதிகாரிகளிடம் கேட்டுகொண்டார்.
அத்துடன், இந்நிகழ்ச்சியை நடாத்துபவர்கள் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் மாநாடுகளை நடாத்துவதன் மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான உத்திகளை வகுத்து வறுமை எனும் நிலையை மாற்ற வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார். மேலும், விருது பெரும் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply