பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படக்கூடாது : சாணக்கியன்
அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2021 ஆம் ஆண்டளவில் இன்னொரு தாக்குதலுக்கும் திட்டமிட்டால் கூட சந்தேகப்படுவதற்கில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “சர்வதேச ரீதியாக இலங்கை மக்களுக்கு நல்லதொரு பெயர் உள்ளது. சுற்றுலா வாசிகளுடன் நட்புறவுடன் பழகும் மக்களாகவே இலங்கையர்கள் இருந்து வருகிறார்கள்.
எனினும், இலங்கையர்கள் தங்கள் நாட்டில் வாழ்வோருடன் அவ்வாறு பழகுவதில்லை. இதற்கு பல உதாரணங்கள் வரலாறு முழுவதும் இடம்பெற்றுள்ளன.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து பேசும் முன்னர், இவ்வாறானதொரு சூழல் நாட்டில் ஏன் ஏற்பட்டது என்பதை ஆராயவேண்டும்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதில் சிறந்தவர்கள். இவ்வாறானவர்களை ஊக்குவித்து நாட்டின் அபிவிருத்திக்கு ஏதேனும் பலனை பெற்றுக்கொள்ளத்தான் நாம் முயற்சிக்க வேண்டும்.
ஆனால் அதனை விடுத்து, அவர்கள் தயாரிக்கும் உணவில் கருக்கலைப்பு மாத்திரை கலக்கப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம் வைத்தியர்கள் கருக்கலைப்பில் ஈடுபடுவதாகவும் அந்தச் சமூகம் தொடர்ச்சியாக தாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைக் காரணமாக 30 வருடகால யுத்தம் இடம்பெற்றது. அதேபோன்று முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது.
இவ்வாறான பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படக்கூடாது. அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2021 ஆம் ஆண்டளவில் இன்னொரு தாக்குதலுக்கும் திட்டமிட்டால் கூட சந்தேகப்படுவதற்கில்லை.
ஏனெனில், இவர்கள்தான் கடந்த காலங்களில் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியவர்கள். அவரைப் போன்ற ஒருவர் மீண்டும் இந்த அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கலாம்.
இதுதொடர்பாக நாட்டு மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply