மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம்: டிரைவர் இல்லாமலேயே இயக்கலாம்

துபாயில் கஸ்டம் ஷோ என்ற தலைப்பில் மேம்படுத்தப்பட்ட 3 நாள் வாகன கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை தீயணைப்புத்துறையின் பொது இயக்குனர் ராஷித் தானி அல் மத்ரூசி தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

இந்த மின்சார தீயணைப்பு வாகனம் ஆஸ்திரிய நாட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் சாதாரண தீயணைப்பு வாகனத்தை விட 20 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. அதேபோல 40 சதவீதம் கூடுதல் செயல்திறனுடையது.

இதன் உட்புறத்தில் ஓட்டுனர் அமரும் பகுதியில் 17 அங்குலம் அளவுள்ள எல்.ஈ.டி. திரை உள்ளது. இதில் உள்ள தொடுதிரை அமைப்பில் ஸ்மார்ட் முறையில் வாகனத்தை கட்டுப்படுத்தலாம்.

அதேபோல இதனை தொலைதூரத்தில் இருந்தபடியும் இயக்க முடியும். அதாவது ரெலிமேட்டிக் தொழில்நுட்பம் மூலம் இந்த வாகனத்தை டிரைவர் இல்லாமலேயே தீயணைப்புத்துறையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி இயக்கலாம். இந்த வாகனத்தில் 6 தீயணைப்பு ஊழியர்கள் பயணம் செய்யலாம். இதில் உள்ள டேங்கில் 4 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளலாம். அதேபோல மின்சார தீ போன்றவற்றை கட்டுப்படுத்தும் நுரை திரவம் 400 லிட்டர் டேங்கில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். அதேபோல வாகனத்தில் 8 மணி நேரம் தொடர்ந்து தீயணைப்புப்பணியை மீட்புக்குழுவினர் மேற்கொள்ளலாம். மேலும் 500 கி.மீ தொலைவு இடைநில்லாமல் பயணம் செய்யலாம். இந்த வாகனம் சந்தைப்படுத்தப்படவில்லை. துபாய் தீயணைப்புத்துறைக்கு மட்டும் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply