பாதுகாப்புத் தேடி ஓமந்தைச் சோதனைச் சாவடி ஊடாக 39 பேர் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை

வன்னியில் விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து 39 பேர் ஏ௯ வீதியூடாக ஓமந்தைச் சோதனைச் சாவடியை வந்தடைந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 
 
பாதுகாப்புத் தேடி 39 பேரும் இரண்டு குழுக்களாக ஓமந்தைச் சோதனைச் சாவடியை வந்தடைந்ததாகவும், முதலாவது குழுவில் 15 ஆண்களும், 10 பெண்களும் உள்ளடங்குவதுடன், இரண்டாவது குழுவில் 7 ஆண்களும், 7 பெண்களும் அடங்குவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலாவது குழு காலை 7.50 மணியளவிலும், இரண்டாவது குழு முற்பகல் 10.30 மணியளவிலும் ஓமந்தையைச் சென்றடைந்துள்ளன. இவர்கள் பள்ளைவாடி, சின்ன அடம்பன் மற்றும் நைனாமடு ஆகிய பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.

மாங்குளம் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதைத் தொடர்ந்தே தாம் அங்கிருந்து வெளியேறிக்கூடியதாக இருந்தது என நைனாமடுப் பகுதியிலிருந்து வந்த இளைஞர் ஒருவரை மேற்கோள்காட்டி பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னியில் உக்கிரமடைந்திருக்கும் மோதல்களால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. இந்தவார ஆரம்பத்தில் மேலும் 14 பேர் கிளிநொச்சியிலிருந்து கடல்மார்க்கமாக வெளியேறி கடற்படையினார் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் ஊடாக புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து வெளியேறி குடநாட்டுக்குச் செல்பவர்கள் குருநகர் கதியா முகாமில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். 
 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply