வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளாது: அமைச்சர் டளஸ்

வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளாது. அங்கு முன்பு குடியிருந்த மக்கள் மாத்திரமே மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவர் என அரசாங்கம் நேற்று  தெரிவித்தது. கிழக்கில் இதுவரை 99 வீதமான மீள்குடியேற்றங்கள் பூர்த்தியடைந்துள்ளதால் இங்கு ஒரு சிங்களக் குடும்பம் கூட திட்டமிட்ட முறையில் குடியமர்த்தப்படவில்லை எனவும் அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கூறினார்.

ஊவா மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டளஸ் அலஹப்பெரும மேலும் கூறியதாவது.

கிழக்கில் மீள்குடியேற்றங்கள் இடம்பெற்ற போதும் இதேபோன்று, புலிகளுக்கு ஆதரவான அரச சார்பற்ற நிறுவனங்களும் எதிர்க்கட்சியும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக குற்றஞ்சாட்டியது. ஆனால் அங்கு 99 வீதமான மீள்குடியேற்றங்கள் நிறைவடைந்துள்ளன.

அவ்வாறு சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டுள் ளனவா என எவருக்கும் நேரில் சென்று அறிந்துகொள்ள முடியும். அங்கு முன்பு குடியிருக்காத எந்த ஒரு சிங்கள, தமிழ், முஸ்லிம் குடும்பமும் மீள்குடியேற்றப்படவில்லை. வடக்கில் மீள்குடியேற்றம் செய்யும் போது சிங்களவர்களை அங்கு திட்டமிட்ட முறையில் மீள் குடியேற்றத் தயாராவதாக மங்கள சமரவீர எம்.பி. சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்திற்கு அப்பட்டமான பொய்யை தெரிவித்து இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்த இவர் முயன்று வருகிறார். தற்பொழுது மன்னார், முசலி பகுதியில் மீள்குடியேற்றங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அங்கு ஒரு சிங்களக் குடும்பம் கூட திட்டமிட்ட முறையில் மீள்குடியேற்றப்பட வில்லை. வடக்கில் முன்பு குடியிருக்காத எந்த வொரு குடும்பமும் அங்கு மீள்குடியேற்றப்பட மாட்டாது. அது குறித்து எவரும் அச்சம் கொள் ளத் தேவையில்லை. இதேவேளை மெனிக்பாமில் ஒரு வாரத்தினுள் 1400 பேர் மரணமடைந்ததாக டைம்ஸ் யு.கே. ஒன்லைனில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறாயின் ஒரு மணித்தியாலத்தில் 8 பேர் இறக்கவேண்டும். இது எதுவித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டாகும். இதனை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம். தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசாங்கத்தின் மீது சேறு பூசுவதற்காகவே இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக் கப்படுகின்றன.

1984ஆம் ஆண்டு மங்கிண்ணாமலை கிராமத்தை ஐ. தே. க. அரசு புல்டோசர் கொண்டு முற்றாக அழித்துது. இவ்வாறான அழிவுகளை செய்த அனுபவம் ஐ. தே. கவுக்கே உள்ளது. தமது வங்கு ரோத்து நிலையை மறைப்பதற்கே அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சி கூறிவருகிறது.

யாழ்ப்பாணத்தில் இருந்து 24 மணி நேரக் காலக்கெடுவுக்குள் வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்கள் கடந்த 19 வருடங்களாக புத்தளம் அகதி முகாம்களில் உள்ளனர். இவர்கள் குறித்து ஐ. தே. க. எதுவும் பேசுவதில்லை என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் நந்தன குணதிலக,
பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சதிகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. அவை வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாட்டுக்குக் கிடைத்த சுதந்திரத்தை ஒதுக்கித்தள்ளும் வகையில் அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது.

1983ஆம் ஆண்டு தென்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் துரத்தியடிக்கப்பட்டனர். இதற்கு அரசியல்வாதிகளும் உதவினர். தற்பொழுது வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

30 வருடங்களின் பின்னர் தாம் விரும்பிய இடத்திற்கு சுதந்திரமாக சென்று வர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்துள்ள சில தரப்பினர் மாறுவேடத்தில் வந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர்.

சகலவித சதிகளுக்கும் சவால்களுக்கும் முகம்கொடுக்கும் சக்தி எமது அரசாங்கத்துக்குள் இருக்கிறது. வடக்கு, கிழக்கு மக்களுக்கு கடந்த காலங்களில் அநீதி இழைக்கப்பட்டது. அதனால் அப்பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply