இலண்டன் ரைம்ஸ் செய்தியை சுகாதார ஸ்தாபனம் நிராகரிப்பு
வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் அதிக உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் கூறி இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த சில வெளிநாட்டு ஊடகங்கள் முயற்சி செய்வதாகச் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹந்தலியனகே நேற்றுத் தெரிவித்தார்.
வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் வாரமொன்றுக்கு 1400 பேர் உயிரிழந்ததாக லண்டன் ரைம்ஸ் மற்றும் ரெலிகிராப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளில் எவ்வித உண்மையுமே இல்லை என்று இச்செய்தியாளர் மாநாட்டில் பங்கு பற்றிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி டாக்டர் பிர்தெளஸி மேத்தா கூறினார்.
சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் டாக்டர் அத்துல கஹந்த லியனகே இது தொடர்பாக மேலும் கூறுகையில், வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் அதிக உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு லண்டன் ரைம்ஸ் மற்றும் ரெலிகிராப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அதுவும் ஜூலை மாதம் 10ம் திகதி முதலான ஒருவார காலத்தில் 1400 பேர் இவ்வாறு உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
எதுவிதமான உண்மையுமே இல்லை.
இந்த நலன்புரி நிலையங்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் இடம்பெறுகின்ற சகல உயிரிழப்புக்களையும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு குறிப்பிட்டிருக்கின்றோம். இம்மரணங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென பிரதம சட்ட வைத்திய அதிகாரியை இணைப்பாளராக நியமித்துள்ளோம். இந்த அடிப்படையில் ஜூன் மாதம் 15ம் திகதி முதல் ஜுலை மாதம் 14ம் திகதி வரையும் இக்கிராமங்களில் 163 பேர் தான் உயிரிழந்துள்ளனர். இதுவே பொலிஸ் பதிவாகும். இதன்படி இக்கிராமங்களில் தினமும் 5.62 சதவீதமான மரணங்கள் தான் இடம்பெறுகின்றன.
இதன்படி லண்டன் ரைம்ஸ் மற்றும் ரெலிகிராப் பத்திரிகைகள் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டு இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படு த்தவும், அரசாங்கம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அளித்துவரும் சிறந்த சுகாதார சேவைக்குச் சேறுபூசவுமே முயற்சி செய்கின்றன. அப்பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தியை நாம் முழுமையாக மறுக்கின்றோம். சர்வதேச பிரமாணங்களுக்கு அமைய வவுனியாவுக்கு இடம்பெயர்ந்திருக்கும் 2 இலட்சத்து 65 ஆயிரம் மக்கள் மத்தியில் 6.6 சதவீதத்திற்கும் 13.2 சதவீதத்திற்குமிடைப்பட்ட வீதத்தில் தான் உயிரிழப்புக்கள் நிகழ வேண்டும். ஆனால் அங்கு 5.6 சதவீத உயிரிழப்புக்களே நிகழுகின்றன. ஆகவே எமது சுகாதார சேவைகள் சிறப்பாக இருப்பதற்கு இது நல்ல எடுத்துக் காட்டு என்றார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் பிரதம சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ஆனந்த சமரசேகர குறிப்பிடுகையில், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் புலிகளின் பிடியில் பல வருடங்கள் இருந்தவர்கள், அதனால் அவர்கள் அனேகர் தீவிர போஷாக்கின்மைக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்குத் தொற்று நோய்களின் தாக்கம் ஏற்படுவது மிகவும் இலகுவாகும். அதனால் தான் இந்நிவாரணக் கிராமங்களில் இடம்பெறும் மரணங்கள் தொடர்பாக உடனுக்குடன் அமைச்சுக்கு அறிய கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply