ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு திடீர் உடல்நலக் குறைவு

மியான்மரில் கடந்த பிப்ரவரியில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அதிபர் வின் மைண்ட் ஆகியோரை ராணுவம் சிறை பிடித்து வைத்துள்ளது.

இதில் தலைவர் ஆங் சான் சூகி மீது தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது; தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது; காலனித்துவ கால அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியது உள்பட 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணை தலைநகர் நேபிடாவில் உள்ள கோர்ட்டில் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக ஆங் சான் சூகி, தான் சிறை வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து காரில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

அவர் கோர்ட்டு அறைக்குள் நுழைந்தபோது மிகவும் சோர்வாக காணப்பட்டார்.‌ திடீரென தலை சுற்றியதால் அங்கிருந்த நாற்காலியில் அப்படியே அமர்ந்தார். தனக்கு உடல் நலம் சரியில்லை என அவர் தனது வக்கீல்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, வக்கீல்கள் நீதிபதியிடம் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை வைத்தனர்.‌ நீதிபதிகள் அதை ஏற்று வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இதைத்தொடர்ந்து ஆங் சான் சூகி மீண்டும் காரில் அவர் சிறை வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply