6 வயதில் கடத்தப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு தாயுடன் இணைந்த மகள்

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம் கிளர்மான்ட்டை சேர்ந்தவர் ஏஞ்சலினா வின்சி. இவருடைய கணவர் பப்ளோ ஹெர்னாண்டஸ். இவர்களுக்கு 6 வயதில் ஜாக்குலின் ஹெர்ணான்டஸ் என்ற மகள் இருந்தார். இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் மட்டும் தாயுடன் வசித்து வந்தார்.

கடந்த 22-12-2007 அன்று ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் திடீரென மாயமானார். இது பற்றி தாயார் போலீசில் புகார் கொடுத்தார். ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் என்ன ஆனார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் 19 வயதாகி விட்ட ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் சமூக வலைதளங்களை பயன்படுத்தினார். பேஸ்புக்கில் பலருடனும் தொடர்பு ஏற்படுத்தி இருந்தார். தான் கடத்தப்பட்ட தகவல்களையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

இதேபோல அவருடைய தாயாரும் பேஸ்புக்கை பயன்படுத்தி வந்தார். அதில் ஏஞ்சலினா வின்சிதான் தனது தாயார் என்பதை ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் கண்டுபிடித்து விட்டார். உடனே ஏஞ்சலினா வின்சியுடன் தொடர்பு கொண்டார்.

இருவரும் பரிமாறிக் கொண்ட தகவல்களை வைத்து தாய்-மகள்தான் என்பது உறுதியானது. இதுபற்றி ஏஞ்சலினா வின்சி புளோரிடா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விசாரணை நடத்தியதிலும் ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் அவரது மகள்தான் என்பது அனைத்து ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.

அவரை அவரது தந்தையே கடத்தி சென்று இருக்கிறார். மகளை கடத்தியதற்கு பிறகு அவர் அமெரிக்காவில் இருந்து பக்கத்து நாடான மெக்சிகோவுக்கு சென்று விட்டார். அங்கேயே ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் வளர்ந்து வந்தார்.

இந்த விவரங்கள் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து இருவரையும் சந்திக்க வைக்கும் நிகழ்ச்சி இரு நாட்டு எல்லையில் நடைபெற்றது.

இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார்கள். 14 ஆண்டுகளுக்கு பிறகு தாய்-மகள் இணைந்ததை பார்த்து உறவினர்களும், நண்பர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply