15 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை : வெள்ளத்தில் மிதக்கும் சென்னை

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஆரம்பத்திலேயே தெரிவித்தது. அதன்படி, பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்துக்கு இயல்பான அளவை விட அதிக அளவில் மழை பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.

அதிலும் வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்குகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது.

இந்நிலையில், வங்க‌க்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

தற்போது மரக்காணம் கூணிமேடு பகுதியில் காற்று வீச துவங்கி உள்ளது. சென்னையில் 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் அதிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சென்னையில் 15 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து கொண்டிருக்கும் கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை அதிகபட்சமாக எண்ணூரில் 17.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., எம்ஆர்சி நகரில் 13.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் பிற இடங்களில் பதிவாகியுள்ள மழை மி.மீ அளவில்;-

  • தாம்பரம் – 232.9
  • சோழவரம் – 220.0
  • எண்ணூர் – 205.0
  • கும்மிடிப்பூண்டி- 184.0
  • செங்குன்றம் -180.0
  • மீனம்பாக்கம் -158.5
  • விமான நிலையம் -116.0
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply