இங்கிலாந்தில் வளர்ப்பு நாய்க்கு கொரோனா பாதிப்பு
இங்கிலாந்தில் வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தலைமை கால்நடை அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 3-ந் தேதி வெய்பிரிட்ஜில் உள்ள விலங்குகள் மற்றும் தாவர சுகாதார குழுவின் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து அந்த வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாய் இப்போது வீட்டில் வைத்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதன் உரிமையாளரிடமிருந்து நாய்க்கு கொரோனா பரவியிருக்கலாம் என்று ஆதாரங்கள் தெரிவிப்பதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவது மிகவும் அரிதானது. மேலும் அவை லேசான மருத்துவ அறிகுறிகளை மட்டுமே காண்பிக்கும் மற்றும் சில நாட்களுக்குள் குணமடையும் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
செல்லப்பிராணிகள் மூலம் நேரடியாக மனிதர்களுக்கு வைரஸ் பரவுகிறது என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை எனவும் நாயை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் நிலைமை மாறினால் செல்லப்பிராணியின் உரிமையாளருக்கு புதிய வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் தொற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் கேத்ரின் ரஸ்ஸல், கொரோனா ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது, தற்போது மக்களிடமிருந்து விலங்குகளுக்கும் பரவுகிறது. இதனால் வளர்ப்பு பிராணிகள் வளர்ப்போர், பொது சுகாதார வழிகாட்டுதலின்படி, செல்லப்பிராணிளைத் தொடுவதற்கு முன்னும் பின்னும் கை கால்களை கழுவ வேண்டும். மேலும், கொரோனா தொற்றின் போது தங்கள் விலங்குகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
சர்வதேச உறுதிமொழிகளுக்கு இணங்க, விலங்குகள் ஆரோக்கிய உலக அமைப்புக்கு இந்த வழக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள பிற நாடுகளிலும் செல்லப்பிராணிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply