ருமேனியாவில் ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 4 பேர் பலி
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தெற்கு பகுதியில் உள்ள பாபெனி நகரில் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.
ராணுவ தொழில்நுட்பத்தை தயாரிப்பதற்காக நிறுவப்பட்ட இந்த ஆலை ருமேனியா ராணுவத்துக்கும், நேட்டோ படைகளுக்கும் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்து, வினியோகம் செய்து வருகிறது.
இந்த ஆயுத உற்பத்தி தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு கண்ணி வெடிகள், கையெறி குண்டுகள் என ராணுவத்துக்கு தேவையான அனைத்து வகை ஆயுதங்களும் உற்பத்தி செய்யப்படுகிறன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த தொழிற்சாலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. தொழிலாளர்கள் அனைவரும் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
அவர்களில் சிலர் கண்ணி வெடிகளை செயலிழக்க செய்து, சோதிக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் கண்ணி வெடி ஒன்று வெடித்து சிதறியது.
இதை தொடர்ந்து, தொழிற்சாலையில் இருந்த, கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அடுத்தடுத்தது வெடித்தன. இதில் அந்த தொழிற்சாலையே அதிர்ந்தது.
தொழிற்சாலையின் பல பகுதிகளிலும் தீப்பற்றி எரிந்தது. இதனால் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் உயிரைக்காப்பற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையில் இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
எனினும் இந்த கோரவிபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இதனிடையே தொழிற்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என கூறி தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது அரசு வக்கீல்கள் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply