சிங்கள – பவுத்த பேரினவாதிகளின் பரப்புரைக்கு கனடா சனநாயக விரோதிகள் அவல் கொடுத்திருக்கிறார்கள்

சிங்கள – பவுத்த பேரினவாதிகளின் பரப்புரைக்கு இந்தச் சனநாயக விரோதிகள் அவல் கொடுத்திருக்கிறார்கள் என கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கிளை தெரிவித்துள்ளது.

கனடாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கலந்துரையாடலில் ஒரு குழுவினர் குழப்பம் விளைவித்தமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

( அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது)

20-11-2021
ரொறன்ரோ
ஊடக அறிக்கை

சிங்கள – பவுத்த பேரினவாதிகளின் பரப்புரைக்கு இந்தச் சனநாயக விரோதிகள் அவல் கொடுத்திருக்கிறார்கள்!
இன்று மாலை கனடா தேசியக் கூட்டமைப்பு ரொறன்ரோவில் நடத்திய பொதுக் கூட்டம் சுமுகமாக நடந்தது. ஆனால் இறுதி நேரத்தில் எம்.ஏ. சுமந்திரன் பேசிக் கொண்டிருந்த போது மண்டபத்தின் பின்புறம் நின்று கொண்டிருந்த சிலர் பேச்சைத் தொடரவிடாமல் உரத்த குரலில் கூச்சல் போடத் தொடங்கினார்கள்.
கூட்டத்தில் அரை மணித்தியாலம் பேசிய இராசமாணிக்கம் சாணக்கியன் எந்தக் குறுக்கீடும் இல்லாது பேசி முடித்தார். அவருக்கு பலத்த கைத்தட்டலும் கிடைத்தது.
அவையோர் எழுத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் என்று பலமுறை சொல்லப்பட்டது. இருந்தும் அவற்றைச் செவிமடுக்காது தொடர்ந்து சுமந்திரனை பேச விடாது கூட்டத்தைக் குழப்பினார்கள். இதனால் கூட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டோம். இப்படி நடப்பது இதுவே முதல் தடவை ஆகும்.
கூட்டம் தொடங்கு முன்னர் சிலர் மண்டபத்துக்கு எதிர்ப்புறமாக புலிக்கொடியுடன் நின்றிருந்தார்கள். கனடா நாட்டில் அமைதியான முறையில் எதிர்ப்பைக் காட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. கனடா ஒரு சனநாயக நாடு என்ற முறையில் அமைதியான முறையில் எதிர்ப்பைக் காட்ட சட்டம் அனுமதிக்கிறது.
கனடிய தமிழ்ச் சமூகம் சட்டத்தை மதிக்கிற ஒரு சமூகம். இந்த நாட்டில் எல்லோருக்கும் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை நூறு விழுக்காடு இருக்கிறது. ஆனால் சட்டத்தை மதியாது சட்டத்தை கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. படித்தவர்களைப் பிடிக்காத ஒரு சிலரே சட்டத்தை தங்கள் கையில் எடுக்கத் துணிகிறார்கள்.
இன்றைய பூகோள அரசியல் சூழலில் தமிழ்மக்களது உரிமைகளை சனநாயக வழிமுறையில் – பேச்சு வார்த்தைகள் மூலம் – அமெரிக்கா, இந்தியா போன்ற வெளிநாடுகளின் ஆதரவுடன்தான் பெறமுடியும். எங்கள் வழி வன்முறைதான் என்றால் மேற்குலக நாடுகள் முன்னர் போல் எம்மைக் கைவிட்டு விடும்.
இதைத்தான் கூட்டத்தை குழப்பியவர்கள் விரும்புகிறார்களா எனக் கேட்க விரும்புகிறோம்? அவர்களது சனநாயக விரோத செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களை அவமதித்தது அவர்களுக்கு வாக்களித்த மக்களை அவமதித்தற்கு ஒப்பாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இருவரும் எமது தாயக மக்களால் சனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள். அந்த மண்ணில் நின்றுகொண்டு அந்த மக்களுக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுப்பவர்கள். குறிப்பாக நா.உ சுமந்திரன் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளது இராசதந்திரிகள், தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளோடு நா.உ சம்பந்தன் ஐயா அவர்களது அறிவுறுத்தலுக்கு இணங்க எங்கள் மக்களது சிக்கல்கள், குறிப்பாக அரசியல் தீர்வு பற்றி தொடர்பாக தொடர்ச்சியாகப் பேசி வருபவர். அவரது அமெரிக்க வருகை ததேகூ க்கு அந்த நாடு விடுத்த அழைப்பின் பேரிலேயே அவரும் சனாதிபதி சட்டத்தரணி கனக-ஈஸ்வரன் மற்றும் முனைவர் நிர்மலா சந்திரகாசன் வருகை தந்துள்ளார்கள்.
தமிழர்கள் என்றால் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் என்ற சிங்கள – பவுத்த பேரினவாதிகளின் பரப்புரைக்கு இந்த சனநாயக விரோதிகள் இன்று அவல் கொடுத்திருக்கிறார்கள் எனக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இதனால் பாதிக்கப்படுபவர்கள் எங்கள் தாயக உறவுகளே. நன்றி.

வே.தங்கவேலு
தலைவர்
கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply