ஒமிக்ரான் வைரசை கண்டு அஞ்ச வேண்டாம்: ஜோ பைடன்
‘ஒமிக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ‘ஒமிக்ரான்’ வைரஸ் வேகமாக பரவுகிறது. அதுமட்டும் இன்றி ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ‘ஒமிக்ரான்’ கால்பதித்து விட்டது.
இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ‘ஒமிக்ரான்’ வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் தெற்கு ஆப்பரிக்க நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்துள்ளன. இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஒருபடி மேலே சென்று ஒட்டுமொத்தமாக அனைத்து நாடுகளுக்கும் பயணத்தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் கவலையளிப்பதாக இருந்தாலும், அதை கண்டு அஞ்ச தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
புதிய வைரஸ் குறித்து வெள்ளை மாளிகையில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது இதனை அவர் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படுவது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது. இது ஒரு கவலையளிக்கக்கூடிய விஷயம் என்றபோதிலும், அதை கண்டு நாம் அஞ்ச தேவயைில்லை.
ஏனெனில் இந்த புதிய மாறுப்பாட்டை எதிர்த்து போராட நாம் தயாராக உள்ளோம். இந்த போரில் முன்பு இருந்ததை விட தற்போது நம்மிடம் அதிக கருவிகள் உள்ளன. எனவே ஒமிக்ரான் வைரஸ் காரணமாக ஊரடங்கை அமல்படுத்தவோ, பயணக்கட்டுப்பாடுகளை நீட்டிக்கவோ அவசியமில்லை. மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டு, முக கவசம் அணிந்தால் போதுமானது.
நம்மிடம் தற்போதுள்ள தடுப்பூசிகள் புதிய வைரசுக்கு எதிராக செயல்படும் என சுகாதார நிபுணர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதேபோல் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வது பாதுகாப்பை அதிகரிக்கும்.
இவ்வாறு ஜோ பைடன் பேசினார்.
முன்னதாக ஒமிக்ரான் வைரஸ் காரணமாக தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அமெரிக்கா நேற்று முன்தினம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply