சர்வதேச நாணய நிதியத்தின் எந்தவொரு நிபந்தனைக்கும் அரசு அடிபணியவில்லை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குக் கடனுதவிவழங்கியதெனவும் எந்தவொரு நிபந்தனைக்கும் அரசாங்கம் அடிபணியவில்லையெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.கடந்த மூன்று வருட காலத்தில் 35,000 புதிய ஆசிரிய நியமனங்களை அரசாங்கத்தினால் வழங்க முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டில் வருமான வரி செலுத்துவோரின் வீதம் வெகுவாகக் குறைந்து காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நான்கு இலட்சம் பேர் மட்டுமே வருமான வரியைச் செலுத்தியுள்ளதாக வருமான வரித் திணைக்கள ஆணையாளர் தம்மிடம் தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

மேல் மாகாணத்தில் புதிதாக 415 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளுநர் அலவி மெளலானா உட்பட மாகாண அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

ஆசிரியர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமின்றி கடந்த மூன்று வருடங்களுக்குள் 35000 ஆசிரியர்களை எம்மால் நியமிக்க முடிந்துள்ளது. மத்திய அரசாங்கத்தால் மாத்திரம் 31,000 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், எத்தகைய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டாலும் அதனையிட்டு எம்மால் திருப்தியுற முடியவில்லை. ஏனெனில் ஆசிரியர்கள் தாம் நியமிக்கப்பட்ட பகுதி பாடசாலைகளில் தமது பொறுப்பை முறையாக நிறைவேற்றத் தவறுகின்றமையே ஆகும்.

சகலரும் தமது வீட்டுக்கருவில் உள்ள பாடசாலைக்கு நியமனத்தை எதிர்பார்த்தால் அது முடியாத காரியமே. பதுளையில் மாத்திரம் இவ்வாறு 26 ஆசிரியர்கள் நியமனத்தைப் பெற்றுக் கொண்டு சேவைக்குச் சமுகமளிக்காமலுள்ளனர். இவர்களுக்கு நான் கூற விரும்புவதெல்லாம் அரச நியமனங்க ளுக்கு மதிப்பளியுங்கள். அதேபோன்று உங்கள் தொழிலுக்குக் கிடைக்கும் சமூக கெளரவத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்பதே.

மக்களின் பணமே ஆசிரியர்களாகிய உங்களுக்குச் சம்பளமாக வழங்கப்படுகிறது- அதனால் அம்மக்கள் திருப்திப்படும் வகையில் உங்கள் சேவையை வழங்குவதற்கு முன்வாருங்கள். வேறு எந்த அரச ஊழியர்களுக்கும் கிடைக்காத மதிப்பு சமூகத்தில் உங்களுக்கு உள்ளது. மாணவர்கள் உங்களை அப்பா, அம்மா எனப் பொருள்படுத்தி அழைக்கின்றனர். அந்த மதிப்பையும் கெளரவத்தையும் பாதுகாக்க முயலுங்கள்.

அண்மையில் நுவரெலியாவில் இடம்பெற்ற சம்பவம் கவலைக்குரியது. ஆசிரியர்கள் தமது கெளரவத்தைப் பாதுகாப்பதுடன் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படக்கூடாதென்பதும் முக்கியமாகும். உணர்ச்சிகளை எதற்கும் அடிமைப்படுத்தாது மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்குவது உங்கள் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் சம்பந்தமாகக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த காலங்களில் அரச ஊழியர்களைக் குறைப்பது போன்ற நிபந்தனைகள் போடப்பட்டதைச் சுட்டிக்காட்டியதுடன் இம்முறை எவ்வித நிபந்தனையுமில்லாமலேயே இக்கடனைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். முதல் தடவையாக மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply