பிரசாரப் பணிகள் நாளை மறுதினம் முடிவு இறுதிக் கட்ட பிரசாரத்தில் கட்சிகள் தீவிரம்
ஊவா மாகாண சபை மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதோடு, தேர்தல் பிரசாரப் பணிகள் யாவும் நாளை மறுதினம் நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையுமென தேர்தல் செயலகம் தெரிவித்தது. ஊவா மாகாண சபை மற்றும் யாழ். வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளன. தேர்தலுக்கு இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
ஊவா மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு மொனராகலை மாவட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கும் இறுதிப் பிரசாரக் கூட்டம் நேற்று (2) நடைபெற்றதோடு, ஐ. ம. சு. முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் பதுளை நகரில் நடத்தப்பட உள்ளது. ஐ. தே. க., ஜே. வி. பி. அடங்கலான பிரதான கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய நகரங்களிலும் தேர்தல் பிரசாரப் பணிகள் சூடுபிடித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. தேர்தல்களுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் பெருமளவு பூர்த்தி அடைந்துள்ளதோடு, ஜுலை 31 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டை விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் திணைக்களம் கூறியது. வாக்காளர் அட்டை கிடைக்காதோர் அருகில் உள்ள தபால் நிலையங்களில் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி தமக்குரிய வாக்காளர் அட்டைகளை பெற முடியும் எனவும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி, ஐ. தே. க., ஜே. வி. பி. உட்பட 23 அரசியல் கட்சிகளும் ஏழு சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 32 பேரை தெரிவு செய்வதற்கான தேர்தலில் 600 பேர் போட்டியிடும் அதேவேளை, 8,75,456 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 814 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற உள்ளது.
யாழ். மாநகர சபைத் தேர்தலில் 4 கட்சிகளும் 2 சுயேச்சைக் குழுக்களும் இங்கு போட்டியிட உள்ளன. 23 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 174 பேர் போட்டியிடுகின்றனர்.
1,00,417 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதோடு, 67 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் பதியப்படவுள்ளன. வவுனியா நகர சபைத் தேர்தலில் 5 அரசியல் கட்சிகளும் 3 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன. 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெறும்.
இந்தத் தேர்தலில் 135 பேர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 24,626 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அதேவேளை, 18 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் பதியப்படவுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply