புலிகளின் தலைவர் பிரபாகரன் கடல் வழியாகத் தப்பியோடக் கூடும்:இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
புலிகளின் பிடியிலிருந்த எண்பது வீதத்திற்கும் மேற்பட்ட பிரதேசங்கள் படையினர் வசமாகியுள்ளது. இதன் மூலம் வன்னிப் பகுதி அடுத்த சில மாதங்களில் படையினர் வசமாகிவிடும் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “சுபாரதி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புலிகளின் ஆளணிப்பலம் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டுள்ளது. சமீபத்திய படை நடவடிக்கைளின் போது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருவதைத் தவிர புலிகளுக்கு வேறுவழியே இல்லை. எனினும், பொதுமக்களை பலவந்தப்படுத்தி யுத்தத்திற்கு ஆட்சேர்ப்பதன் மூலம் தாக்குதலைத் தொடர்ந்து நடத்துவது அவர்களது நோக்கமாகும்.
சயனைட் உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு பிரபாகரனுக்கு தைரியம் இல்லை எனவும், தோல்வியின் விளிம்பில் உள்ள புலிகளின் தலைவர் பிரபாகரன் கடல் வழியாகத் தப்பியோடக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த முனையில் படையினரின் முன்னேற்றங்கள் குறித்தும் விளக்கமளித்த இராணுவத் தளபதி பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
30000 படைவீரர்கள் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும், 30000 படைவீரர்கள் கைப்பற்றிய பிரதேசங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய மாபெரும் வெற்றிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவமே மிகப்பெரிய பங்களிப்பாகுமென்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply