கிழக்கைச் சேர்ந்த 1445 பேரை சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் பணி நாளை ஆரம்பம்

வவுனியா நலன்புரிக் கிராமங்களில் உள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1445 பேரை சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப் படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். அம்பாறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 190 பேரும் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 329 பேரும் திருகோணமலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 292 பேரும் மற்றும் கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 634 பேருமே இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாதப் பிடியில் சிக்குண்டு, பின்னர் மனிதநேய நடவடிக்கைகளால் மீட்கப்பட்ட பொது மக்களை அவரவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இதனையடுத்து வடக்கின் மீள் குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்குப் பொறுப்பான செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவின்படியே இந்த மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதேவேளை, யாழ் நலன்புரி நிலையங்களிலுள்ள 650 குடும்பங்களைச் சேர்ந்த 3020 போரும் வவுனியா நலன்புரிக் கிராமங்களிலுள்ள குடாநாட்டைச் சேர்ந்த 52 குடும்பங்களும் நாளை யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.மீள் குடியேற்றம் நடைபெறவுள்ள பிரதேசங்களின் அரச அதிபர்கள் உட்பட பொறுப்பு வாய்ந்த சகல உத்தியோகஸ்தர்களும் இந்த மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர் என்றும் வடமாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply