உக்ரைனில் போரை நிறுத்த வேண்டும்- புதினுக்கு, ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வேண்டுகோள்

ரஷியா நடத்தி வரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஆதரவாக ஹாலிவுட் மூத்த நடிகர், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் குரல் கொடுத்துள்ளார். உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்த வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளதாவது:

எனது அன்பான ரஷிய நண்பர்கள் மற்றும் உக்ரைனில் பணியாற்றும் ரஷிய வீரர்களுக்கு சென்று அடையும் வகையில் இந்த செய்தியை அனுப்புகிறேன்.

உலகில் நடக்கும் விஷயங்கள் உங்களிடமிருந்து மறைக்கப்பட்டவை, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயங்கரமான விஷயங்கள் இருப்பதால், நான் உங்களிடம் பேசுகிறேன். உக்ரைனில் நடக்கும் போரைப் பற்றிய உண்மையை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ரஷியா படையெடுப்பு 141 நாடுகளால் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் (மகப்பேறு மருத்துவமனை போன்றவை) குண்டுவீசித் தாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் இறந்துள்ளனர்.

உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கைகளால் உலகமே ரஷியாவுக்கு எதிராக திரும்பியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் மீது ரஷியா குண்டு மழை பொழிவது, உலகை சீற்றம் அடையச் செய்துள்ளது.

உலகப் பொருளாதாரத் தடைகள் உங்கள் நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ளன. இது உங்கள் தாத்தா அல்லது உங்கள் பெரியப்பா போராடியது போல ரஷியாவைக் காப்பதற்கான போர் அல்ல.இது சட்டவிரோதமான போர்.

இந்த ஒளிபரப்பைக் கேட்கும் ரஷ்ய வீரர்களுக்கு, நான் பேசும் உண்மை தெரியும். நீங்கள் அதை உங்கள் கண்களில் பார்த்திருக்கிறீர்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷிய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் உயிரிழந்தார்.

67 வயதான அவர் குடியிருந்த கட்டிடம் மீது ரஷிய ஏவுகணை தாக்கியது. நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஒக்ஸானா உயிரிழந்ததை யங் தியேட்டர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அவரது மரணம் சரி செய்ய முடியாத துயரம் என்று சக நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply