ரசாயன ஆயுத பேச்சு கவனத்தை திசைதிருப்பும் தந்திரம் : அமெரிக்காவுக்கு ரஷியா கண்டனம்

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை ரஷியா தீவிரப்படுத்தி வரும் நிலையில், ரஷியாவுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஷியா மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளனர். இப்போது உக்ரைன் மீது ரஷியா ரசாயன தாக்குதலை நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ஆயுதங்களை அனுப்பி உதவுவதால் ரஷியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைனில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்தது.

இதுபற்றி ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரஷியா உக்ரைனில் ரசாயன ஆயுதங்களை நாடலாம் என்ற அமெரிக்காவின் பேச்சு, அந்த நாட்டிற்கான மோசமான கேள்விகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் தந்திரம், என்றார்.

நேட்டோ தனது கிழக்குப் பகுதியை பலப்படுத்தியதற்கு பதிலடியாக ரஷியா தனது பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்த வேண்டும் என்பது குறித்து அதிபர் புதினிடம் ராணுவம் செயல்திட்டங்களை வழங்கும் என்றும் பெஸ்கோவ் கூறினார்.

போரினால் சிதிலமடைந்த மரியுபோல் போன்ற நகரங்களை ரஷியா மீண்டும் கட்டமைக்குமா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ நிலைப்பாடு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் பெஸ்கோவ் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply