புலிகளின் உலக வலையமைப்பின் முக்கிய தகவல்கள் அம்பலம்: கோதாபய ராஜபக்ஷ

நீண்டகாலமாக அரும்பாடுபட்டு பொருத்தமான பல திட்டங்களை வகுத்துச் செயற்பட்டதாலேயே கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி (சிங்கள ஒலிபரப்பு) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனைக் கூறினார்.நாட்டின் புலனாய்வுத் துறை உட்பட பாதுகாப்புப் படையினர் பத்மநாதன் பற்றிய தகவல்களை ஏற்கனவே அறிந்திருந்தனர் எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலிகளின் தலைவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அந்த அமைப்பின் சர்வதேச பலத்தை ஒழிக்க வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு இருந்தது. கே.பி.யை விசாரணை செய்வதன் மூலம் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் முக்கியமான தகவல்களைப் பெறமுடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் கொலைசெய்யப்பட்ட பின்னர் அந்த இயக்கத்தின் தலைவராக தன்னைத் தானே கே.பி. அடையாளப்படுத்தி உலகிலுள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் பாதுகாப்பமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முப்பது வருடகாலமாக இயங்கி வந்துள்ள புலிகள் இயக்கம் உலகிலுள்ள வல்லரசு நாடுகளுக்குக் கூட அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வலுவடைந்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் ஆரம்பமானது. இதனையடுத்து சர்வதேச ரீதியாக பாரிய அழுத்தங்கள் விடுக்கப்பட்டமை இதற்கு சிறந்த உதாரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் ஜனாதிபதியின் நேரடியான தலைமைத்துவம் காரணமாக இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் உட்பட பல குழுக்கள் ஜனாதிபதிக்கோ அரசாங்கத்துக்கோ வெளிநாட்டுத் தொடர்புகள் கிடையாதென விமர்சனம் செய்து வந்துள்ளன.

ஆனால் தற்போது இலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்குமிடையில் உயர்மட்டத்திலான நல்லுறவு பேணப்படுகிறது. கே.பி.யைக் கைது செய் வதற்கும் இந்த சர்வதேச நல்லுறவுகள் துணைபுரிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply