வவுனியாவில் காவலரண்களை நீக்கி போக்குவரத்தை சீராக்க நடவடிக்கை

வவுனியா பிரதேசத்தில் கைவிடப்பட்ட பொலிஸ் காவலரண்களை நீக்கி நகரைச் சுத்திகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்தார். இதற்கென வடமாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார். வவுனியா பிரதேசத்தில் வீதிச் சோதனைக்காக சுமார் 40முதல் 50வரையான பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவையாவும், இறுதிக்கட்ட யுத்தத்துக்குப் பின்னர் கைவிட்டப்பட்டன. எனினும்காவலரண்கள் அகற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் போக்கு வரத்துச் செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனை நிவர்த்திக்கு முகமாக, கைவிடப்பட்ட அனைத்துப் பொலிஸ் காவலரண்களையும் நீக்கிவிட்டு, நகரைச் சுத்திகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் குறிப்பிட்டார். இதேவேளை, வவுனியா நகரை நவீனமயப்படுத்துவதற்கான இறுதி நகல் வரைவுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். முக்கிய அரச நிறுவனங்களின் கட்டடங்களை ஒரு புறமாக நிர்மாணிப்பதுடன், நகரை வர்த்தக மையப் பகுதியாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

செட்டிக்குளம் – மனிக்ஃபாம் நிவாரண இடைநிலை கிராமங்களில் மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். வலயங்களுக்குப் பொறுப்பான தளபதிகள், முகாமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரை நேற்று  வவுனியா அழைத்து அரச அதிபர் இந்தப் பணிப்புரைகளை விடுத்துள்ளார். மழையின் காரணமாக கூடாரங்கள், மலசல கூடங்கள் மற்றும் சமையல் நட வடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க மாற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச அதிபர் பணித்துள்ளார். இது தொடர்பில், வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று நடை பெற்ற சந்திப்பில் விரிவாக ஆராய்ந்து அறி வுறுத்தல்களை வழங்கியதாக அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தினகரனுக்குத் தெரிவித்தார்.

நிவாரண இடைநிலை கிராமங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தற்போது இடைக்கிடை மழைபெய்து வருகிறது. இதனால் அங்கு சிறு சிறு இடை யூறுகள் ஏற்பட்டுள்ளனன. எனவே, இந்தச் சிறு பாதிப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு பாரிய மழை பெய்தால், ஏற்படக்கூடிய பாதிப் புகளைத் தவிர்ப்பதற்கு முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி அரச அதிபர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அறி வுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்.

இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அங்கவீனர்கள், மனநிலை பாதிக்கப்பட்டோர், பல்கலைக் கழகங்களுக்குப் புதிதாகத் தெரிவான மாணவர்கள் ஆகியோரை முகாம்களிலிருந்து விடுவிப்பது தொடர்பில் விபரங்களைத் திரட்டி அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் அரச அதிபர் திருமதி சார்ள்ஸ், அதிகாரிகளைப் பணித்துள்ளார். அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை ஒரு வார காலத்திற்குள் பூர்த்திசெய்ய எதிர்பார்ப்பதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply