புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோ சென்னையில் கைது
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பை ஆதரித்தும், நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்பட்டார்.
‘இலங்கையில் நடப்பது என்ன’ என்ற தலைப்பில் மதிமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசுகையி்ல், புலிகள் மீதான தடையை உடனே நீக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன், என்றார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன், தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும் என்று பேசினார்.
வைகோ, கண்ணப்பனின் பேச்சுக்கு காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந் நிலையில் இன்று மாலை க்யூ பிராஞ்ச் போலீசார் திடீரென வைகோவின் சென்னை அண்ணா நகர் இல்லத்துக்குச் சென்று அவரைக் கைது செய்தனர். விரைவில் கண்ணப்பனும் கைது செய்யப்படுவார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைகோவின் கைதை அறிந்து ஏராளமான தொண்டர்கள் அவரது வீடு முன் குவிந்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர் கைது செய்யப்பட்டார். க்யூ பிராஞ்ச் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திResponses are currently closed, but you can trackback from your own site.