புலிகள் மீதான தடை இந்தியா நீக்காது

இலங்கையில் கைது செய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் குமரன் பத்மநாதன் அல்லது கே.பி.யை நாடு கடத்துமாறு இந்திய விசாரணை முகவரமைப்புகள் கோரிக்கை விடுக்கும் சாத்தியம் உள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையின் பின்னணியில் உள்ள “உண்மைக் கதையைக் கண்டுபிடிக்க இந்த வலியுறுத்தலை இந்திய விசாரணை முகவரமைப்புகள் விடுக்கும் சாத்தியம் இருப்பதாக “டெக்கான் றெரால்ட பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிருடன் இருக்கும் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் பத்மநாதனாகும். 1991 இல் தமிழ் நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட போது அதில் சம்பந்தப்பட்ட சதியாளர்களுக்கு இடவசதி வழங்கியதில் பத்மநாதன் முக்கியமான பங்களிப்பை வழங்கியதாக அறியவருவதாகவும் தமிழ் நாட்டிற்குப் பல தடவைகள் அவர் வருகை தந்ததாகவும் புலி உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாகவும் வட்டாரங்கள் கூறியுள்ளன.

பத்மநாதனுக்கு பிடியாணை பிறப்பித்த பின்னர் பத்மநாதனைத் தேடப்படும் குற்றவாளியென்று இன்ரர்போல் அறிவித்திருந்தது. குற்றச்சதி, ஆயுதக் கடத்தல், இந்திய ஆட்புல எல்லை வெடிபொருட்கள் தொடர்பான சட்டத்தை மீறியமை தொடர்பான குற்றச்சா ட்டுகளுக்காக புலிகளின் தலைவரை இன்ரர்போல் கைது செய்ய வேண்டுமென இந்தியா விரும்பியது.

பத்மநாதன் தொடர்பாக இந்தியா கொண்டிருக்கும் ஆர்வம் குறித்து கேட்கப்பட்ட போது, புலிகளின் தலைவர் இந்தியாவில் தேடப்பட்டவர் என்று இந்திய மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியுள்ளார்.

பத்மநாதனை தனது பாதுகாப்பில் கைது செய்து வைத்திருக்க இந்தியா முயற்சிக்குமா என்பது பற்றிய கேள்விக்குப் பதிலளித்திருக்கும் பிள்ளை, “உடனடியாக இல்லை. அவர் இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் ஓடிவிட மாட்டார்’ என்று பிள்ளை கூறியுள்ளார். உரிய வேளையில் அந்த நடவடிக்கை இடம்பெறும் என்பதை இவர் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லாவிடினும் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.  ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு நிதி, ஆயுதங்கள், வெடிமருந்துகள் தொடர்பில் உபகரணங்களை வழங்கியதில் கே.பி. முக்கிய பங்கு வகித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தற்கொலைக் குண்டுதாரி தனு அணிவதற்கு ஆர்.டி.எக்ஸ். மற்றும் சி4 அங்கியையும் சிவராசனுக்கு ஏ.கே47 மற்றும் செக் 9.மி.மீ. பிஸ்ரல்களையும் கே.பி. வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply