அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: இராணுவப் பேச்சாளர்
கிளிநொச்சியைக் கைப்பற்றும் இறுதிக்கட்டச் சமர் ஆரம்பித்திருப்பதாகக் பாதுகாப்புத் தரப்பில் கூறப்படும் நிலையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரியவருகிறது.
நாளுக்குநாள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக 130 பேர் வந்துள்ளனர்” என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறும்போது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் எனக் குறிப்பிட்டிருக்கும் இராணுவப் பேச்சாளர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கமுடியாது எனவும், இராணுவத்தினரின் பாதுகாப்பு அவசியம் என்பதையும் அவர்கள் உணர்ந்திருப்பதாகவும் ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.
நேற்றையதினம் இரண்டு குழுக்கள் ஓமந்தைச் சோதனைச்சாவடியை வந்தடைந்ததாகவும், முதலாவது குழுவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆண்களும், 28 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்திருக்கும் அவர், இரண்டாவது குழுவில் 6 ஆண்களும், 4 பெண்களும் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததாகவும் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து 299 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தடைந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் அந்த ஊடகத்திடம் குறிப்பிட்டார்.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறி, யாழ்ப்பாணம், மணலாறு மற்றும் மன்னார் பகுதிகளில் 935 பேர் தஞ்சமடைந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறும் மக்களுக்கான அனைத்துத் தேவைகளையும் நிவர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply