ஒன்றிணையாவிட்டால் நாடு நாசம் : சஜித் பிரேமதாஸ

கடந்த 3 ஆண்டுகளில் இந்நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றவர்கள் சொல்வதைக் காதில் வாங்காமல், தாங்கள் மாத்திரம் தான் சரி என்று எண்ணிச் செயற்பட்டமையினால் நாடு தற்போது பெரும் பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து சமூக,பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்குச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சர்வாதிகாரம் இன்றி அனைவரது கருத்துக்களுக்கும் செவிசாய்க்கும் சமூக சீர்திருத்தத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும், அதற்காக முற்போக்குக் கட்சிகளின் முன்மொழிவுகளையும் யோசனைகளையும் செவிமடுப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், பன்முகப்படுத்தப்பட்ட யோசனைகளை ஒன்றிணைக்கக்கூடிய பொதுவான தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலம் இறுதியில் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே எதிர்க்கட்சியின் நோக்கமாகும் எனவும் அந்த நிகழ்ச்சி நிரலின் ஊடாக நாட்டு மக்கள் இழந்த மூச்சை மீண்டும் வழங்க முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பாரிய வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான “தேசிய மறுசீரமைப்பு மற்றும் அடுத்தக்கட்ட பயணம்” என்ற வேலைத்திட்டத்தின் தீர்மானமிக்க கூட்டம் நேற்று (04) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தவிசாளர் சரத் பொன்சேகா, வைத்தியர் ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சி.வி.விக்னேஸ்வரன், பி.திகாம்பரம் உட்பட அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன், ஜனரஞ்சன, காமினி வியங்கொட, ரொஹான் சமரஜீவ உட்பட சிவில் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply