இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் நம்பிக்கை இல்லை : பிரதமர் ரணில்
பொருளாதார நெருக்கடி, அன்னிய செலாவணி வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதனால் தற்காலிக தீர்வு கிடைத்தாலும், நாட்டின் நீண்டகால மேம்பாட்டுக்கு வழி தெரியவில்லை. இந்த நிலையில் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீண்டுவர நீண்ட காலம் ஆகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது அவர் கூறியதாவது:-
நமது பொருளாதாரம் தற்போது வீழ்ச்சியடைந்து வருகிறது. அதை மீட்டெடுக்க முயன்று வருகிறோம். மத்திய வங்கியின் தரவுகள் அடிப்படையில், நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் மைனஸ் 4 முதல் மைனஸ் 5 வரை உள்ளது. அதேநேரம் மைனஸ் 6 முதல் மைனஸ் 7 வரை இருப்பதாக சர்வதேச நிதியம் கூறியிருக்கிறது. இது மிகவும் நெருக்கடியான நிலை. இந்த செயல்திட்டத்தில் நாம் உறுதியான பயணத்தை மேற்கொண்டால், 2023-ம் ஆண்டு இறுதியில் மைனஸ் 1 என்ற பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடையலாம். 2021-ம் ஆண்டு ரு.17½ லட்சம் கோடியாக இருந்த அரசின் கடன் சுமை 2022 மார்ச் மாதத்துக்குள் ரூ.21.6 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளில் மோசமாகிவிட்ட நிலைமையின் விளைவுகளை இலங்கை அனுபவித்து வருகிறது. இவை அனைத்தும் 2 நாளில் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் அல்ல. கடந்த பல ஆண்டுகளாக நாம் கடைப்பிடித்து வந்த சில குறிப்பிட்ட பாரம்பரிய யோசனைகளின் விளைவுகளால் நாம் அவதிப்பட்டு வருகிறோம்.
எனவே நான் ஏற்கனவே கூறியதுபோல, 2023-ம் ஆண்டிலும் நாம் துன்பப்பட்டுதான் ஆக வேண்டும். இதுதான் உண்மை. அந்தவகையில் 2023-ம் ஆண்டு இறுதிவரை நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் நம்பிக்கை இல்லை. ஒரு திவாலான நாடாக, சர்வதேச நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால், 4 ஆண்டுகளுக்கு இலங்கைக்கு சர்வதேச நிதியம் கடன் வழங்கும். அதன் பின்னர் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் பொதுவான உடன்படிக்கை மூலம் கடன் வழங்கக்கூடிய அமைப்பை இலங்கை உருவாக்கும். எரிபொருள் தட்டுப்பாடும், உணவு பற்றாக்குறையும்தான் இன்று இலங்கை சந்திக்கும் பிரதான பிரச்சினைகள் ஆகும். உக்ரைன் போர் இலங்கையின் நெருக்கடியை மேலும் மோசமாக்கி விட்டது.
இந்த நெருக்கடி நமக்கு மட்டுமல்ல, இந்தியா, இந்தோனேஷியா நாடுகள் கூட இந்த சர்வதேச நெருக்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே நமக்கு வழங்கிய கடன் உதவியை இந்தியா குறைக்க வேண்டியதாகி விட்டது. இலங்கை தனது வழிகளை மாற்றிக்கொள்ளாவிட்டால், ஒட்டுமொத்த நாடும் சிதைந்து விடும் என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply