கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு: ரஷியாவிடம் மீண்டும் உதவி கேட்ட கோத்தபய ராஜபக்சே
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, எரிபொருள் இறக்குமதி செய்ய கடனுதவி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இலங்கையில் நீடித்து வரும் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச நாடுகளின் உதவியை அந்த நாடு நாடி வருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே கடனுதவியாகவும், எரிபொருள் உதவியாகவும் வழங்கி வருகின்றன.
அதேநேரம் புதிதாக எரிபொருள் இறக்குமதி செய்ய அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசி வருகிறார். அந்தவகையில் நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் மீண்டும் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாஸ்கோவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய கடனுதவி வழங்குமாறு புதினிடம் கேட்டுக்கொண்டார். மேலும் ரஷிய விமான நிறுவனமான ஏரோபிளாட்டை மீண்டும் இலங்கையில் இருந்து இயக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். புதினுடனான இந்த பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாக கூறியுள்ள கோத்தபய ராஜபக்சே, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பும் கோத்தபய ராஜபக்சே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற சிக்கல்களால் தவித்து வரும் இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. எனவே இத்தகைய சூழலில் இலங்கைக்கு பயணம் செல்வதை தவிர்க்குமாறு இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளன. இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் போராட்டங்களை சுட்டிக்காட்டியுள்ள இந்த நாடுகள், இலங்கைக்கு அத்தியாவசியம் இல்லாத பயணங்களை தவிர்க்குமாறு குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் ஏற்கனவே இதுபோன்ற எச்சரிக்கைகளை தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சர்வதேச நாடுகள் விதித்து வரும் தடைகளால் இலங்கையின் சுற்றுலாத்துறை மேலும் மோசமடையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனாவால் மோசமடைந்திருந்த இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போதுதான் படிப்படியாக தேறி வந்தது. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் இலங்கைக்கு 4.11 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 17 ஆயிரம் பேர் மட்டுமே வந்திருந்தனர். இந்த சூழலில் சர்வதேச நாடுகளின் இந்த தடை தங்களை மேலும் பாதிக்கும் என இலங்கை சுற்றுலா ஆணைய தலைவர் பிரியந்தா பெர்னாண்டோ கவலை வெளியிட்டு உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply