இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு வாய்ப்பு
இங்கிலாந்து பிரதமர் மற்றும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த நிலையில், அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அடுத்த வாரம் இது தொடர்பான கால அட்டவணை வெளியிடப்படும் என கன்சர்வேடிவ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கூறி உள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியில் எம்.பி.க்களின் ஆதரவுடன் இறுதி செய்யப்பட்ட 2 வேட்பாளர்கள் தலைமை பொறுப்புக்கு போட்டியிடுவார்கள். இந்த நிலையில், இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் போட்டியில் தாம் பங்கேற்க உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அறிவித்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராகவும், உங்கள் பிரதமராகவும் நான் நிற்கிறேன் என்றும், தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், நாட்டை மீண்டும் ஒன்றிணைப்பதற்கும் இது சரியான தருணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். வடக்கு யோர்க்-ஷயர் தொகுதியில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானார். அமைச்சராகவும், வருவாயை கையாளும் கருவூலக அதிகாரியாகவும் இவர் பணியாற்றினார். மேலும் கொரோனா தொற்று காலத்தில் ஆற்றிய பணிகளால் பிரபலமானார். இதேபோல அமைச்சரவை அட்டர்னி ஜெனரலும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சூவெல்லா பிரேவர்மேனும் புதிய பிரதமர் பதவிக்கு போட்டியிடபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் ரிஷி சுனக் முன்னணியில் உள்ளதால் அவர் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply