தேர்தல் பிரசாரம் செய்தபோது ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே சுட்டுக்கொலை உலக தலைவர்கள் இரங்கல்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, தேர்தல் பிரசாரம் செய்தபோது, சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே (வயது 67). இவர் 2006-07, 2012-20 கால கட்டத்தில் அங்கு பிரதமர் பதவி வகித்தவர். அந்த நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவரும் அவர்தான்.
மேலும், லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் ஆவார். கடந்த 2020-ம் ஆண்டு, அவர் உடல்நல பிரச்சினையை (பெருங்குடல் அழற்சி) காரணம் காட்டி பதவி விலகினார். ஆனாலும் கட்சி செயல்பாடுகளில் கலந்துகொண்டு வந்தார். இந்த நிலையில், ஜப்பான் நாடாளுமன்ற மேல்சபைக்கு நாளை (10-ந் தேதி) தேர்தல் நடக்க உள்ளது. நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஷின்ஜோ அபே கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசத்தொடங்கிய சில நிமிடங்களில், அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபர் அவரை துப்பாக்கியால் 2 முறை சுட, அவர் கழுத்தில் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக நாரா மருத்துவ பல்கலைக்கழக ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அப்போதே அவரது மூச்சு நின்று விட்டது, இதயம் செயல்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் அவரைக் காப்பாற்ற 20 பேரை கொண்ட டாக்டர்கள் குழு பல மணி நேரம் போராடியது. 100 யூனிட்டுக்கும் அதிகமான ரத்தம் செலுத்தப்பட்டது.
அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது. குண்டுபாய்ந்த காயமானது அவரது இதயத்தை அடையும் அளவுக்கு ஆழமாக இருந்துள்ளது. டாக்டர்கள் எவ்வளவோ முயற்சித்தும் ஷின்ஜோ அபேயை காப்பாற்ற முடியவில்லை. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.03 மணிக்கு அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். ஜப்பானில் சுட்டுக்கொல்லப்பட்ட 6-வது முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஷின்ஜோ அபேவுக்கு அக்கீ மாட்சுசகி என்ற மனைவி உள்ளார். ஷின்ஜோ அபே மறைவால் ஜப்பான் சோகத்தில் மூழ்கி உள்ளது.
ஷின்ஜோ அபேயை சுட்ட நபர், டெட்சுயா யாமகாமி (வயது 41), கடற்படை வீரர் என தெரிய வந்துள்ளது. அவர் உடனே சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். அவர் நாரா நிஷி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்படுகிறார். முதல் கட்ட விசாரணையின்போது, ஷின்ஜோ அபே மீதும், அவரது கொள்கைகள் மீதும் ஏற்பட்ட அதிருப்தியால்தான் அவரை சுட்டுக்கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார். ஷின்ஜோ அபே, இந்தியாவுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார். கடந்த ஆண்டு அவருக்கு நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்மவிபூஷண் வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. ஷின்ஜோ அபே சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதற்கு பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷிய அதிபர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, தைவான் அதிபர் சாய் இங் வென் என என உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply