இலங்கை அதிபர் ராஜபக்சே தப்பிக்க மாலத்தீவு சபாநாயகர் பேச்சுவார்த்தை ?
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்ரமித்தனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்றும், இன்று அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் கோத்தபய ராஜபக்சே இலங்கை விமானப்படை விமானத்தில் மாலைதீவு தலைநகர் மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று அதிகாலையில் அவர் மாலே நகரை அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கோத்தபயவுடன் 13 பேர் ஏஎன்32 விமானத்தில் மாலத்தீவு சென்றதாக தொலைக்காட்சி செய்தி சேனல்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பிச் செல்வது தொடர்பாக மாலத்தீவு பாராளுமன்ற சபாநாயகரும் முன்னாள் அதிபருமான மொஹமட் நஷீத் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ராஜபக்சே இன்னும் இலங்கையின் அதிபராக இருக்கிறார். அவர் ராஜினாமாவோ அல்லது வாரிசுக்கு தனது அதிகாரங்களையும் ஒப்படைக்கவில்லை என்றும் அதனால் அவர் மாலத்தீவுக்கு செல்ல விரும்பினால் அதை மறுத்திருக்க முடியாது எனவும் மாலத்தீவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாலத்தீவில் இராணுவ விமானத்தை தரையிறக்குவதற்கான கோரிக்கைகள் மாலத்தீவில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டதாகவும், பின்னர் சபாநாயகர் நஷீத்தின் கோரிக்கையின் பேரில் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply