புலிகளின் சகல கடல் மார்க்க விநியோகங்களும் தடைப்பட்டுள்ளன
கடற்படையினர் மேற்கொண்டு வரும் விசேட பாதுகாப்புத் திட்டம் காரணமாக புலிகளின் சகல கடல் மார்க்க விநியோகங்களும் தடைப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை செயற்பாட்டுப் பணிப்பாளர் ரியா எட்மிரல் சோமரத்ன திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சுபாரதி நிகழ்ச்சியில் நேற்றுக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடற்படையினரின் பாதுகாப்புத் திட்டம் காரணமாக புலிகள் மேற்கொண்டு வந்த ஆயுதக் கடத்தல்களும் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் புலிகளுக்குச் சொந்தமான 8 ஆயுதக் கப்பல்களை கடற்படையினர் முற்றாக அழித்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினரால் அண்மையில் பூநகரிப் பிரதேசம் கைப்பற்றப்பட்டதன் பின்னர் நாட்டின் மேற்குக் கடல் பிராந்தியத்தையயும் கடற்படையினர் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கிழக்குக் கடல் பிராந்தியத்திலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கிளிநொச்சியை நோக்கி படையினர் முன்னேறி வரும் இச்சந்தர்ப்பத்தில் அவர்களின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் புலிகள் கடல் மார்க்கமாகத் தப்பியோட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் செய்திகளை அவர் முற்றாக மறுத்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply