விவசாயிகளுடன் பசில் ராஜபக்ஷ யாழ். தென்மராட்சியில் ஏர்பூட்டு விழாவில் பங்கேற்பு

யாழ். தென்மராட்சியில் தனங்கிளப்பு, மறவன்புலவு கிராமசேவகர் பிரிவுகளில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் செய்கை பண்ணப்படாமல் தரிசு நிலங்களாக இருந்த 1124 ஏக்கர் வயற்காணிகளில் செய்கை பண்ணப்படும் ஏர்பூட்டு விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் ஒழுங் கமைப் பாளருமான பசில் ராஜபக்ஷ எம். பி. விவசாயிகளுடன் இணைந்து ஏர்பூட்டு விழாவில் கலந்து கொண்டார்.

மறவன் புலவு கிராம சேவகர் பிரிவிலிருந்து 560 விவசாயிகளும், தனங்கிளப்பு கிராமசேவகர் பிரிவிலிருந்து 540 விவசாயிகளும் கலந்துகொண்டனர். நேற்றைய ஏர்பூட்டு விழாவுக்காக 60 உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 1124 ஏக்கர் நிலத்தையும் உழுவதற்காக இவை ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு விவசாயிகளுக்கும் உழுவதற்காக தலா 4000 ரூபா வீதம் வழங்கப்பட்டதுடன் தேவையான விதை நெல் மற்றும் உரம் இலவசமாகப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான பசுமை புரட்சி  வேலைத்திட்டத்திற்கமைவாக வடக்கில் தரிசு நிலங்களாகக் கிடக்கும் விவசாய நிலங்கள் யாவற்றயும் கண்டறிந்து விளை நிலங்களாக மாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு அங்கமாகவே தென்மராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி விவசாயிகள் மழையை நம்பி அடுத்த பெரும் போகத்திற்கான ஆரம்ப வேலைகளை நேற்று ஆரம்பித்தனர். வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறியின் ஏற்பாட்டின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரச அதிபர் கே. கணேஸ் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இவ்விழாவைத் தொடர்ந்து யாழ். கச்சேரியில் நடைபெற்ற வடக்கின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்திலும் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply