வடக்கு முகாம்களிலிருந்து இதுவரை 10 ஆயிரம் பேர் தப்பிச் சென்றுள்ளனர்

வட பகுதி அகதி முகாம்களிலிருந்து சுமார் 10,000 பேர் தப்பிச் சென்றுள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்களம் நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பிடக் கூடிய தொகையில் அகதிகள் முகாம்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளியேறியுள்ளனர் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு மதிப்பீட்டின் புள்ளி விபரத் தகவல்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “வட பகுதி அகதி முகாம்களிலிருந்து பத்தாயிரம் பேர் வரையில் தப்பிச் சென்றிருக்கலாம். இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளியேறிச் சென்றவர்கள் பலர் மீண்டும் அகதி முகாம்களுக்குத் திரும்பவில்லை. அகதி முகாம்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் வழங்கிப் பலர் தப்பிச் சென்றுள்ளனர். அகதி முகாம்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய வரும் வாகனங்களின் மூலமாகவும் சிலர் தப்பிச் சென்றுள்ளனர். அகதி முகாமிலிருந்து தப்பிச் செல்வதற்காக சிலர் லட்சக் கணக்கான ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.” இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா அரசாங்க அதிபர் திணைக்களம் மேற்கொண்ட மேற்படி ஆய்வுகளின் இறுதி அறிக்கை பாதுகாப்பு தரப்பினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply